வழக்கம் போல் ஊறுகாய்
'அப்பா இப்ப வந்திரும். வந்ததும் பத்தே நிமிஷத்தில குழம்பும் பொரியலும் ஆக்கி ஆத்தா சோறு போட்டுருவேன்.அப்புறமாதூங்கலாம் ராசா' என்று மடியில் பசி மயக்கத்தில் தூங்க எத்தனித்தபடி பாதி கண் மூடியும் பாதி கண் மூடாமலும் படுத்திருந்தமகன் கண்ணனிடம் கூறினாள் யசோதா.
'ம்ம்' என்று பசி மயக்கத்தில் வார்த்தை வராமல் முனங்கினான் கண்ணன்.
'இப்படியே போனா என்னத்த பண்ண தெரில. பேரு தான் விவசாயி. ஊருக்கே சோறாக்க பயிர் பண்ணி என்ன பிரயோசனம். நம்ம வயித்து சோற்றுக்கு அடுத்தவன்கிட்ட கையேந்த வேண்டியதால இருக்கு.’ என்று தன் வாழ்வின் ஆதங்கங்கத்தை தனக்குதானே மனதுக்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தாள் யசோதா.
'யசோத யசோத' அந்த குடிசை வீட்டு வாசற்படியில் வாசற்படியின் உயரத்திற்கு தகுந்தாற்போல் தன் முதுகை வளைத்துஉடலை குள்ளமாக்கி கொண்டு அரை குறையாய் திறந்திருந்த கதவின் வழியே வீட்டுக்குள் அங்குமிங்கும் பராக்கு பார்த்தபடிஅழைத்தாள் பாக்யம்.
‘'யாரது ??, பாக்கியமா ??இந்தா வாரேன்.’ என்று குரல் கொடுத்து கொண்டே மடியில் கிடந்த கண்ணணின் தலையை தரையில்நவிழ்ட்டி தரையில் படுக்க வைத்தாள்.
யாசேதாவின் குரல் பாதி திறந்திருந்த கதவிற்கு பின்னால் இருந்து வருவதை உணர்ந்த பாக்கியம் 'ஓ இந்த பக்கம் இருக்கியா'என்று கேட்டுக்கொண்டே தன் தலையை இன்னும் ஒரு அடி குனித்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
'ஆமா….’என்று கூறிக்கொண்டே யசோதா எழுந்தாள்.
‘என்ன போன வாரம் களை பறிக்க சோலிக்கு வரவே இல்ல'
'ஆமா எழையவனுக்கு சோமில்ல அதான்.’
‘நம்ம சோமுக்கா??.’
‘என்ன செய்து??’
'பிள்ள தல தூக்க கலியாம கிடந்தான்.ஒரே காய்ச்சல்.அதான் அவன் கூடய இருந்தேன்'
'இப்ப எப்படியிருக்கு'
‘இப்ப சரியாட்டு. வெளியவும் திரிய போயாச்சு. அதுக்கு பயலுக கூட விளையாட போனா பசி தூக்கம் ஒன்னும் தெரியாது .சாப்பிடுக நேரம் ஆகு.காலேல ஆட போனது.இன்னும் வந்து சேரல பாரு.’
'எங்க வீட்டுலேயும் சின்னவன் அதே கததான். பெரியவன் கொஞ்சம் வீடடங்கி இருப்பான்.’
'அதுகலேலாம் அடக்க முடியாது.’
‘ஆமாக்கா.ஆமா,இவன் ஏன் இப்படி கொழக்கடினு படுத்து கிடக்கான் ?? இவனுக்கும் சோம்மில்லியா..’ என்று அரைமயக்கத்தில் படுத்திருக்கும் கண்ணனை பார்த்து கேட்டாள் பாக்யம்.
‘'அதுலாம் ஒன்னுமில்ல .பிள்ளைக்கு பசி. ஊருக்கே சோறு போட சேத்துல இறங்குனாலும் நம்ம சோத்துக்கு ஒவ்வொருநாளும் ஜிங்கி தான அடிக்க வேண்டி கிடக்கு.’
‘ஏன் இன்னும் பொங்கலியா. அரிசி இல்லியா.’
‘அரிசி போன வாரந்தான் ரேஷன்ல வாங்கிட்டு வந்தேன். ஒரு வாரம வேறுஞ் சோத்த பொங்கி பொங்கி ஊறுகாய நக்கி தான்வயித்து பாடு கழியுது. நாம எப்படி நாளும் தின்டுருவோம். பிள்ளைகளுக்கு எத்தன நாள் இறங்கும். எறக்கம் முட்டுகுஅதுகளுக்கு. அதான் அவுகள்ட சொன்னேன். சந்தேல அவுக சொக்காரன் பெரிய கடை வச்சிருக்கான். அவன்ட்ட போய் கடன்வாங்கி எதான் காய் வாங்கிட்டு வாரேன் போயிருக்காவோ.’ பெருமூச்சு விட்டாள் யசோதா.
‘ஆமா நம்ம புழப்பு பல்ல காட்டுக கதைய எங்க போய் சொல்ல'
'ஆமா. சரி நீ ஏன் நின்னுட்டே இருக்க, இரி.’ என்று பாக்யத்திடம் கூறிக்கொண்டு தானும் அமர மண்டிபோட்டாள் யசோதா.
‘இல்லக்கா .போகோண்டியதான். அடுப்புல ஒல கொதிக்கு.உன்கிட்ட கொஞ்சம் அரிசி வாங்கிட்டு போலாம்னு வந்தேன். சுத்தமா அரிசி இல்ல. ரேஷன்ல வர ரெண்டு நாளாகும் சொல்றான்.இரண்டு புடி அரிசி தந்தேனா,ரேஷன்ல வந்ததும் வாங்கிதந்திரேன்.’ என்று தயங்கி தயங்கி கையில் உள்ள பாத்திரத்தை நீட்டினாள் பாக்யம்.
‘'அதுக்கு ஏன் இப்பிடி பதுங்கி பதுங்கி கேக்க.இங்க கொண்டா‘ பாக்கியம் கையிலுள்ள பாத்திரத்தை பிடுங்கினாள் யசோதா.
யசோதா பாக்யம் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் அரிசியை கொட்டிக்கொண்டிருக்க வெளியே விளையாட போயிருந்தசோமு ஓடி வந்து மண்டியிட்டு அரிசியை பாத்திரத்தில் நிரப்பி கொண்டிருந்த யசோதாவின் கழுத்தில் தன் கையை வைத்து சுற்றி வளைத்து கொண்டு தொங்கினான்.
'லேய் பய்ய தொங்கு. கழுத்து இருகு' என்று அவன் பிடியை தளர்த்தினாள் யசோதா.
'அப்டி அம்மைக்கு கழுத்தில தொங்க கூடாது' என்று பாக்யமும் சோமுவை எச்சரித்தாள்.
யசோதா அரிசியை நிரப்பி பாக்யத்தின் கையில் பாத்திரத்தை கொடுக்க,தன் உடம்பில் வழிந்த வேர்வையை தன் கந்தல்முந்தானையால் துடைத்துக் கொண்டே இன்னொரு கையில் பாத்திரத்தை வாங்கினாள் பாக்யம்.
யசோதாவின் ஒரு காலை கட்டிக்கொண்டு 'அப்பா எப்ப வரும்' என்று அண்ணாந்து அவள் முகத்தை பார்த்து கேட்டான் சோமு.
‘இப்ப வந்திரும்' என்று யசோதா சோமுவிற்கு பதில் கூறிக்கொண்டிருக்க
'சரிக்கா நான் வாரேன்.’ என்று பாக்யம் விடைபெற்றுக்கொண்டாள்.
‘நான் அப்பா வாரால சந்திக்கு போய் பாத்திட்டு வாரேன்' என்று சோமு வாசலை நோக்கி ஓடினான்.
‘ உங்க அப்பா வந்தாதான் அந்த ஓட்ட வண்டி ஊருக்கே சத்தம் போடுமே .பேசாம வீட்ல கிடல. இவ்ளோ நேரம் ஆடிட்டுவந்தாச்சுல' என்று யசோதா கத்த அதை சிறிதும் பொருட்படுத்தாமல் காற்றாய் பறந்து மறைந்தான் சோமு.
‘ட்டுரூ டக் ட்டுரு டக் டக் ப்ருட்டு' என்ற சத்தம் ஊரையே கூட்டும் வகையில் கேட்டது.
‘எல கண்ணா அப்பா வந்தாச்சு.எந்திரி’ என்று கண்ணணிடம் பேசிக்கொண்டே எண்ணெய் இல்லாத வரட்சியில் அங்குமிங்கும் பரந்து கிடந்த கையால் அடக்கி ஒதுக்கி கொண்டை போட்டபடி எழுந்தாள். அடுப்பில் இரண்டு காய்ந்த குச்சுகளை எடுத்துசொருகி தீமூட்டி ஊதினாள்.
ஊரையே கூட்டியபடி ஒலி எழுப்பிக்கொண்ட வந்த ‘டிவிஎஸ்’ பைக் ஊரின் கடைசி பகுதியில் இருந்த குடிசை வீட்டுவரிசைகளில் இருந்த யசோதாவின் வீட்டின் முன் நின்றது.
வண்டியின் கைபிடிக்கும் இருக்கைக்கும் நடுவில் நின்று கொண்டிருந்த மகன் சோமுவை கீழே இறக்கி விட்டுவிட்டு தானும் கீழேஇறங்கி ஸ்டாண்டை போட்டுவிட்டு மடித்து கட்டியிருந்த லுங்கியை இறக்கி விட்டபடி இடது கையில் சோமுவை பிடித்தபடிகுனிந்து குடிசைக்குள் நுழைந்தான் கிட்டு.
‘என்னயா வெறுங்கைய வீசிட்டு வர. காய் எங்க'
அதுக்கு பதில் கூறாமல் மூஞ்சியை தொங்கவிட்டபடி பாதி தூக்கத்தில் இருந்த கண்ணன் அருகில் உட்கார்ந்தான் கிட்டு. சோமு கிட்டுவின் மடியில் அமர்ந்து அப்பா லாலி பாப் என்று அவன் கண்ணத்தை தட்டிக்கொண்டு இருந்தான்.
‘இருடா வாங்கி தரேன்'
‘உன்ன தான் கேக்ககேன். காய் எங்க??’’
'வாங்கலடி'
'வாங்கலேனா….நான் அடுப்ப பத்த வச்சாச்சு'
'அடுப்ப பத்து வச்சாச்சுன்னா….பைசாவ புடுங்குனுனவன் கிட்ட போய் வாங்கிட்டு வா'என்று கோபமாக கத்தினான் கிட்டு.
கிட்டுவின் சத்தத்தில் அரண்டு அரை தூக்கத்தில் இருந்து மீண்டு பயத்தில் உடலை சுருக்கி கொண்டு கிட்டுவை பார்த்தான்கண்ணன்.
யசோதா பற்ற வைத்த அடுப்பு தகதகவென எரிந்து கொண்டிருந்தது.
'பைசாவ புடுங்கிட்டான…யாருயா??’
‘அந்த சவத்து பய,டிராப்பிக்காரன் தான் ஹேல்மட் இல்லனு காரணத்த சொல்லி கடன் வாங்கிட்டு வந்து ஐந்நூறு ரூவாவையும்புடுங்கிட்டான்.மாச கடைசிலா.அவனுக்கு துட்டுக்கு தட்டுபாடு.’
'சவத்து பய.அவனுக்கு மட்டுந்தான் துட்டுக்கு தட்டுபாடு வருமா.’
‘ஹெல்மட் போடாதது நம்ம தப்பு தான.’
‘வேல பாத்து வர்ர 100 200 கூலிய பாக்கேல,முதல்ல வீட்டு சாமானம் வாங்க தோணுமா.இல்ல ஹெல்மட் வாங்க தோணுமா. சரி ஐந்நூறுவா புடுங்குனாலா.அப்படியே அந்த பைசாக்கு ஒரு ஹெல்மட்ட தரோண்டியதான. அடுத்த தடவ போட்டுட்டுபோவோம்ல.அப்போ அவனுக்கு நம்ம உசுர பத்தி கவல இல்ல.காசு பாக்க இது ஒரு சாக்கு. சவத்து பய நல்லாவே இருக்கு மாட்டான்' என்று பொரிந்து தள்ளினாள் யசோதா. அவள் வலது கண்ணில் சுரந்த நீர் கண்ணத்தில் கோடு போட்டது போல்வழிந்தது.
'சரி இன்னைக்கும் ஊருகா தான்.’ என்று எரிகிற அடுப்பில் விரக்தியில் தண்ணீர் ஊற்றி அனைத்தாள் யசோதா.
'லே சோமு.கடைக்கு போய் ஊருகா வாங்கிட்டு வால' என்று துருப்பிடித்து இருந்த இரும்பு டப்பாவை துளாவி அதில் கிடந்தசில்லறைகளை பொறுக்கி கொண்டே ‘எல்லாவனும் காசு பித்து முடிச்சு தான் அலையான். எல்லா காரியத்துக்கும் காசு காசு. சொல்லி வச்ச மாதிரி,எல்லா பயலுக்கும்,எங்க இருந்து இப்படி புத்தி வருதோ.எங்க பாத்தாலும் லஞ்சம், ஊழல்.சை’ புலம்பினாள் யசோதா
‘நான் போமாட்டேன்.’’
‘ஏமுல போமாட்ட'
'எனக்கு போகனும் தோணல'
'தோணலிய.சும்மா சொல்லுகத கேக்கமா,ஊரெல்லாம் திரியேலா.தேவைக்கு போ சொன்னா உயிர எடுப்பிய'
பதில் கூறாமல் அமர்ந்திருந்தான் சோமு.
'சரில.முட்டாசி வாங்க ரூவா தாரேன்.போய்ட்டு வா.’
'ஐய்.அப்ப போரேன்'
'அதான.இப்ப பல் இழிப்பியே.இருக்க அஞ்சு ரூவால இவனுக்கு முட்டாசிக்கு ஒரு ரூவா தெண்டம்.ஒன்னும் சொல்றதிகில்ல'என்று வசைபாடிகொண்டே சோமுவிடம் சில்லறை நீட்டினாள் யசோதா.
சில்லறையை வாங்கி கொண்டு துள்ளி குதித்து ஓடினான் சோமு.
எழுத்தாளர்

0 Comments