**** தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories

தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories

பைத்தியக்கார அப்பா




  நல்ல வெயிலு கூட்டம் அதிகமா இல்லை பேருந்து மேலூரிலிருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

மேலூரைத்தாண்டி பேருந்து நின்றது கூட்டமாக ஏறினார்கள்.வயதான பெருசு கிட்டத்தட்ட வயது எழுபத்தைந்து இருக்கும்.கூடவே அவரு பையன் பல்லைக்காட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டு வேகமாக ஏறினான்.இருவரும் கடைசி சீட்டில் வந்து அமர்ந்தார்கள்.

பெருசு பக்கத்தில் அமர்ந்தவரிடம் வளர்நகர் போகுமா என்று கேட்டார்.அவன் தலையை மட்டும் அசைத்தான்.பேருந்து சென்றுகொண்டிருந்தது.பேருந்தினுள் உள்ள வெக்கை அந்தப் பையன் சிரித்துக்கொண்டே இருக்கிறான்.

டிரைவர் முன்னால் இருந்து பழைய பாடல் 

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா”

 ஒலித்துக்கொண்டிருக்கிறது.அப்பா இது திருச்சி போற பஸ்சு பா என்று கத்தி சிரித்தான்.பையன் பக்கத்தில் இருந்தவர் கடுப்பேறி மதுரை போற பஸ்சு பா என்று சத்தமா சொன்னார்.


கண்ட்டெக்டர் சீட்டு சீட்டு என்று கேட்டுக்கொண்டே வந்தார்.எங்க போகணும் வளர்நகர் நாற்பத்திரெண்டு எடு என்றார் கண்ட்டெக்டர்.வயதானவர் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் சில்லரையை ஒவ்வொரு பைசாவாக எண்ணிக்கொண்டிருந்தார் கண்ட்டெக்டரிடம் இருபது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.யோவ் நாற்பத்திரெண்டு ரூபாயா திரும்பவும் பாக்கெட்டில் கையைவிட்டு சில்லரையை எடுத்து எண்ணினார்.கழுத்தில் ஒரு சிறு துண்டு அழுக்கு பிடித்த டவுசர் வழுக்கை தலை பக்கு பக்குனு முழித்துக்கொண்டிருந்தார்.இத தாண்டி அடுத்த ஸ்டாப்ல டோல்கேட் வரும் அங்க எறங்கி டவுன்பஸ்ல வான்னு கண்ட்டெக்டர் சொல்ல பக்கு பக்குனு திரும்பவும் முழித்துக்கொண்டு டவுசர் பாக்கெட்டில் கையைவிட்டு சில்லரையை எடுத்தார்.

பக்கத்தில் இருந்தவர் யோவ் அங்க இறங்கி டவுன்பஸ் வரும் அதுல வா என்று ஆளப்பாருன்னு கோவத்துடன் சொன்னார்.ஒரு பையன் கையைத்தட்டி சிரித்து பைத்தியக்கார அப்பா அப்படின்னு சத்தமா சொன்னான்.

அவர் திருதிருன்னு முழித்தார்.பக்கத்தில் இருந்தவர் செல்போனை எடுத்து கேம்ஸ் விளையாடிக்கொண்டே இருந்தார்.பெருசோட பையன் சிரித்துக்கொண்டே எட்டி எட்டிப்  பார்த்தான்.பக்கத்தில் இருந்தவர் டேய் கே.பு.முறைத்துச்சொன்னார்.பேருந்து சென்றுகொண்டே இருந்தது.அழுக்குச்சட்டை,நீலநிற பேண்ட்,முகத்தில் எண்ணை பசபசப்பு நிரம்பி இருந்தது.அந்தப் பையனுக்கு பத்து வயசு இருக்கும் மீண்டும் டவுசரில் கையைவிட்டு சில்லரையை எண்ணிக்கொண்டிருந்தார்.

பாதிவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு இரண்டு பேரையும் இறக்கிவிட்டார் கண்ட்டெக்டர்.அட பைத்தியகார அப்பா என்று பையன் அப்பாவைப் பார்த்து சொன்னான்.இருவரும் அங்கே நின்றுகொண்டு இருந்தனர்.தூரத்தில் இருசக்கர வண்டியில் மொக்கையன் வந்து கொண்டிருந்தான்.பெருசு கையை என்ன பெருசு இங்க நிக்கற இந்த வேகாத வெயில்ல நின்னுகிட்டு இருக்க எங்க போகனும்.பெருசு சொன்னாரு மதுர.நானும் மதுரைக்குத்தான் போறேன் போற வழியில இறக்கி விட்டுறேன்.பெருசு பையனை முன்னால் உக்கார வைத்துவிட்டு பின்னால் அமர்ந்தார்.அந்தப் பையன் கேட்டான் மாமா,மாமா உங்க பேரு என்ன?எந்த ஊரு மாமா?உசிலம்பட்டி பக்கத்துல செல்லாயிபுரம்டா.பேரு மொக்கையண்டா.கொஞ்சநேரத்தில் வளர்நகர் வந்தது பெருசு....

 ரொம்ப நன்றி தம்பி நீ மகராசனா இருக்கனும் என்றார்.பெருசு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத ஏதோ வெயில்ல நின்னுகிட்டு இருந்த பாவம்னு ஏத்திகிட்டு வந்தேன்.டவுசரில் இருந்து நூறு ரூபாயை எடுத்து அந்தப் பையனிடம் நீட்டினார்.பெருசு இது என்ன?எதுக்கு? உன் மகனுக்கு புதுதுணி எடுத்துக்குடுன்னு திருப்பி அவர் பாக்கெட்டில் வைத்தான்.கவலப்படாத செல்லாயிஅம்மன் அருள் உனக்கு எப்பவும் உண்டு.பெருசு மகன் இரண்டு கையை மேலதூக்கி சத்தமாக கத்தினான்.அவன் சிரிப்பிலிருந்து புன்னகை தெரிந்தது.ஒத்தையடிப்பாதை வழியாக மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கையைப்பிடித்து சென்றுகொண்டு இருக்கையில் ஈரப்பதமான காற்று அவர் முகத்தில் வீசியது.பறவைகள் எங்கும் மாலைவேளையில் தம் இருப்பிடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

    

                                              மா.மணிகண்டன்

                                                 தமிழ் ஆசிரியர்

                                                  திரு.வி.க.தெரு,

                                                 கோம்பை-625522

                                            உத்தமபாளையம் வட்டம்

                                                தேனி மாவட்டம்

Post a Comment

0 Comments