**** *_என் வாழ்வின் இனிய நாள்*_

*_என் வாழ்வின் இனிய நாள்*_



 

அன்று காலையில் என்றும் இல்லாதது போல் சிறிது  ஆர்வத்துடனும்,  உற்சாகத்துடனும், குழப்பத்துடனும் இருந்தது. மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருப்பினும் சிறிது தயக்கம். சரி, நடப்பது நடக்கட்டும் செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வெளியே கிளம்பினேன். தீர்க்கமான முடிவல்ல. கல்லூரி செல்வோம் பிறகு மனம் அந்த நொடியில் கூறும் செல்ல வேண்டுமா? இல்லையா? என்று.

 

 

கல்லூரி முடித்த உடன் பேருந்து நிலையத்தில் நின்ற உடன் மாமல்லபுரம் பேருந்து வந்தது. ஒரு கணம் கூட சிந்திக்கவில்லை. பேருந்தில் ஏறினேன். நானும் எதிர் பார்க்கவில்லை பேருந்தின் முதல் இருக்கை ஓட்டுனருக்கு நேர் பக்கத்தில் பயணத்தின்  மகிழ்ச்சி ஆரம்பமானது. மாமல்லபுரத்திற்கு பயணச்சீட்டு வாங்கி விட்டு காதொலிப்பானை (headset)என் இரு செவிகளில் மாட்டினேன். சிறிது தூரம் சென்றவுடன் மழை பொழியத் தொடங்கியது. கனமாக அல்ல. வல்லவர்கள் பூக்களைத் தூவி வாழ்த்து கூறுவது போல். கருமேகம், குளிர்ந்த சூழலுடன் முதல் இருக்கையில் இலகுவான காற்று, இசையின் வரிகள் உடனான பாடல் உள்ளத்தில் ஊடுருவத் தொடங்கியது. அந்தக் கணங்களை எந்த வரியாலும் எடுத்துரைக்க இயலவில்லை. சிறிய காணொளி, (video & photos )புகைப்படங்களை கம்பி போட்ட சன்னலின் இடைவெளியில் எடுத்துக் கொண்டிருந்தேன்.  

 

 

பயணத்தின் தூரம் சென்றதும் எனக்கு எதிரே சாலையின் இரு ஓரங்களிலும் மரம் செடிகளுடன் இருபக்க பசுமை வரவேற்பு அளித்தது. முதல் இருக்கை, இசையுடன் வேறு. இன்னொரு திருப்பு (turning) வந்தது. பேருந்து திரும்பியது. மாமல்லபுரம் அருகே பேருந்து நெருங்கியதை என்னால் உணர முடிந்தது. இருப்பினும், பெயர் பலகையுடன் ஊருக்குள் செல்லும் முன் வந்த காட்சி இன்னும் என் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.

 

 

இசையுடன் முதல் இருக்கை, கரு மேகத்துடன் சாரல், பாலத்தை கடக்க நேர்ந்தது. சிறு பாலம் தான், இருபுறமும் நீர் இல்லை. ஆனால், ஆற்று மணல் இருந்தது அதை கடக்கும் போது இயற்கையின் பாதுகாப்புடன் கூடிய மன அமைதி, அளவில்லா மகிழ்ச்சி, அதற்கேற்ற இசை இன்றளவும் அதை உணர முடிகிறது. மாமல்லபுரம் ஊருக்குள் பேருந்து நுழைந்தது ஒருவித உற்சாகம் மனதை ஆட்கொண்டது. நண்பர்களுடன் அங்கு முன்பு சென்று இருந்தாலும் இம்முறை நான் செல்லும்போது புதுமையான வடிவத்தில் காட்சி அளித்தது.  

 

 

நேரே இறங்கி ஒரு உணவகம் சென்றேன். அதுபற்றியும் கூறத்தான் வேண்டும். மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் அதனுள் சென்றேன். பாரம்பரிய உணவகம் போல் இருந்தது. பெயர்ப்பலகை வரவேற்பு முகப்பு போல் இருந்தது. அதில் உள் நுழைந்தேன். இருபக்க புல்வெளி நடுவில் நடந்து சென்றேன். நேரே சென்றால், பசுமையான புல் செடிகள் ஆங்காங்கே சிலைகள் அதன் நடுவில் குடிலின் கீழே நாற்காலி, மேசைகள் அங்கு ஒருவரும் இல்லை. அதன் பக்கவாட்டு வழியில் சென்றால் உணவக சமையலறை அதன் முதலாளி இருந்தனர். அங்கு சென்று கடற்கரை கோவில் திறக்கும் நேரம் விசாரித்து, உணவு என்னென்ன உள்ளது என்பதை அறிந்து ஒரு மாம்பழ சாறு, (mango juice) காலிஃப்ளவர் பக்கோடா(gobi 65) சொல்லிவிட்டு குடிலின் அடியிலுள்ள நாற்காலியில் கைகளை கழுவிவிட்டு அமர்ந்தேன். உணவு வரும்வரை அமைதியாக அந்த இயற்கையின் நடுவில் அமர இயலாது. அலைபேசி எடுத்து படம் எடுக்க தொடங்கினேன். பிறகு மாம்பழ சாறு, காலிஃப்ளவர் பக்கோடா வந்தது. அந்த இயற்கையின் நடுவில் நான் மட்டும்தான் வேறு யாரும் அந்த நேரத்தில் அங்கு இல்லை. மழை சாரல் உடன் சூடான காலிஃப்ளவர் பக்கோடா உண்டு குளிர்ந்த மாம்பழ சாறு குடித்து விட்டு மீண்டும் அங்கு சென்றேன். அவர்கள் மிகவும் இன்முகத்துடன் பேசினார்கள். அங்கிருந்த குழந்தைகளும் மழலையின் மொழியில் பேசினார்கள்.

 

 

அங்கிருந்து விடைபெற்று கடற்கரை கோயில் காண சென்றேன். கடற்கரைக் கோயில் உள் செல்ல பயணச் சீட்டு வாங்கிக்கொண்டு உள் நுழைந்தேன். ஒவ்வொரு அழகிய காட்சியையும் படம்பிடித்தேன். சுற்றுலாப் பயணிகளும் நிறைய நபர்கள் இருந்தார்கள். அழகிய காட்சியை நன்கு ரசித்தேன். அங்கு நான் சென்ற நேரத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலாவிற்காக வந்தனர். அவர்களின் புகைப்படங்களையும் எடுத்து, மரத்தினடியில், கோவிலின் உள்ளே, வெளியே, கடற்கரையின் அருகே உள்ள கோயில், ஒவ்வொன்றும் அழகிய காட்சி, மன நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சி வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மனம் மறுத்தது. அங்கு சிறிதுநேரம் அமர்ந்து பாடல் கேட்டேன்.  

 

 

 

பின் அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன். செல்லும் வழியில் நான் கூற தேவையில்லை.  கடைகளால் நிறைந்திருக்கும். அதனை ரசித்துக்கொண்டே சென்றேன். கடற்கரையின் சிறிது தொலைவில்  பலூன் துப்பாக்கியால் சுடுதல், கூடையில் பந்தை தொலைவில் இருந்து எறிதல் போன்ற விளையாட்டு இருந்தது. பிறகு அதை விளையாடும் போது மிகுந்த ஆனந்தம் முதல் முறை தான் உற்சாகமாக இருந்தது.  அங்கிருந்த அக்காவும் நன்கு உரையாடினார்.

 


 

பிறகு கடற்கரை நோக்கி கால் சென்றது. அலையடிக்கும் கடல் நீரில் எனது கால்களை வைத்து சிறிது தூரம் சென்றேன். அலைகள் என்னை அணைப்பது போல் எனை தீண்டிச் சென்றது. கடலின் அழகை பார்க்கும் போது இந்த பிரபஞ்சத்தில் என்னை நானே உணர்ந்தேன். புதுவித உணர்வு. நானும் இயற்கையும். திடீரென்று பின்புறத்திலிருந்து ஒரு கை என்னை பிடித்தது. திரும்பினேன், ஒரு பெண் எனக்கு பயமாக உள்ளது, சிறிது நேரம் தங்களது கைகளை பிடித்துக் கொள்கிறேன், என்றார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து செல்ல மனமில்லை என்றாலும் பிரியாவிடை பெற்று மீண்டும் கடைகளின் நடுவில் பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன்.  

 

முன்பு உண்ட உணவகம் எதிரே சிறிய தள்ளுவண்டி அங்கு சென்று ரோட்டுக்கடை காளான் வாங்கி அந்த கடையில் உள்ள சிறு நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டு கிளம்பினேன். பேருந்துநிலையத்தில் பேருந்து வரவில்லை. சிறிது நேரம் பார்த்து விட்டு அருகில் உள்ள உணவகத்தில் தர்பூசணி சாறு (watermelon)    குடித்து முடித்தேன். உடன் பேருந்து வந்தது இம்முறை பேருந்தின் நடுவில் ஜன்னல் ஓரமாய் அமர்ந்தேன்.

 

 

மனம் அமைதியான ஆனந்தத்தால் நிறைந்திருந்தது. மீண்டும் காதில் காதொலிப்பானை, மாட்டி, இயற்கையின் தென்றல் இசையுடன் வீச, இரவின் சிறு ஒளியில் மனம் துள்ளி மகிழ பயணம் தொடர வேண்டும் என்று மனம் ஏங்க, முடிவு என்ற ஒன்று நிச்சயம் வேண்டுமல்லவா?

 

இனிமையான நாளின் இனிய நிறைவு. என்னுடைய பிறந்தநாள் இயற்கையின் வாழ்த்துகளுடன் நிறைவேறியது. இவ்வகிலத்தின் மிகச் சிறந்த ஆயுதம் மனம். அதை சரியான வழியில், பிடித்த முறையில் செலவிடுங்கள் இயற்கையோடு.



R.Iniyabala

Ariyalur

Post a Comment

3 Comments

  1. Congratulations...

    Keep enjoying yourself..

    Take the life on your turn.

    ReplyDelete
  2. Congrats. ...
    Keep going on 👏👏👍👍👍

    ReplyDelete