**** **இயற்கை*பயணம்*

**இயற்கை*பயணம்*



 

  *பயணம்* தொடங்கியது, இமய மலையை நோக்கி. ஐந்து நண்பர்களுடன் என்னுடைய இமய மலை பயணத்தை ஆரம்பித்தேன். பல நாட்களாக தடைப்பட்டு போன பயணம் ஒரு வழியாக முடிவு செய்யப்பட்டு தொடங்கியது. ஸ்வட்டர்,ஸ்கார்ஃப் என பயணத்திற்கு தேவையான அனைத்தும் பையில் துணிக்கப்பட்டன. ஒரு வழியாக மலையின் அடிவாரத்தை எட்டினோம். கனவா அல்லது நினைவா என்று தெரியவில்லை, கையை அடித்தும் கில்லியும் உணர்ந்தேன். அனைவரின் உடல் குளிரால் நடுங்கினாலும் உதட்டில் ஓரப்புன்னகை. 

   நடைப்பயணம் மலை உச்சியை நோக்கி தொடங்கியது. ஆரவாரம்,உரையாடல் , தெய்வீக பாடல் என களைப்பு தெரியாமல் நடந்தோம். கைகள் இரண்டும் பனிக்கட்டியைப் போல் உறைந்துபோனது. பற்கள் மேள தாளம் முழங்க கால்கள் இரண்டும் கதகளி ஆடின. நேரம் செல்லச் செல்ல எங்கள் உரையாடல் குறையத்தொடங்கியது. ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிர் காய்ந்தோம்.பனியோ நெருப்பை பிழைக்க வழிவகுக்கவில்லை. மலை உச்சியை அடைவதென்பது சிவபெருமான் மனம் இறங்கினால் மட்டுமே இயலும். மலை உச்சியை அடைந்தாகவேண்டும் என்று ஒரு ஆர்வம் என இயம்புவதா, பக்தி என இயம்புவதா (நிச்சயமாக பக்திதான்). செல்லும் வழியில் பல நபர்களை சந்தித்தாலும் ஒருவரின்   சந்திப்பு மட்டும் எங்களுக்கு வினோதம். அவர் ஒரு அகோரி. உடல் முழுவதும் சாம்பல் பூசி கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் பல. கையில் ஒரு தடி. நாங்கள் அனைவரும் அவரை பார்த்து ஸ்தம்பித்து நின்றோம். காரணம் சினிமாவில் பார்த்து வந்த நிலையில் நேரில் வந்து நின்றால் எவ்வாறு இருக்கும் சற்று யோசித்து பாருங்கள். அவரின் பார்வை எங்களை காந்தம் இரும்பை கவர்தல் போல் இருந்தது. எங்கள் உணர்வு மாறியது. ஏதோ ஒரு தெய்வீக சக்தி எங்களினுள் புகுந்து எங்களை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று வந்தது. அவரின் தோற்றத்தால் விறைத்துப்போனோம்.அவ்விடத்தில் பனி, குளிர் தோற்றுவிட்டது.அவர் மேல் பயம் கலந்த பக்தியா அல்லது பக்தி கலந்த பயம் என்பதா. "" *நான்* *கடவுள்* ""படம் இரண்டாம் பாகம் என் கண் முன் வந்து சென்றது. அவர் எங்களை நோக்கி சில வார்த்தைகள் கூறி விட்டு நகர்ந்தார். அவர் சொல்லை மீற முடியாமல் தவித்து நின்றோம். எங்கள் தூண்டுதலின்றி எங்கள் கால்கள் கீழே நோக்கி நடந்தன. கைபேசி எடுத்துச் செல்லக்கூடாது என திட்டவட்டமாக இருந்தோம். குளிர் காற்று குறையத் துவங்கியது. சில மணி நேரம் கழித்து ஒரு டீக்கடை வழியாக சென்று கொண்டிருக்க ஒரே இரைச்சல். என்னவென்று விசாரிக்க உயிர் நாடி நின்று திரும்ப வந்தது. வராமல் இருந்திருந்தால் நல்லது என ஆயிற்று. வானொலியின் செய்திகள் எங்களை புரட்டிப்போட்டது. "இமய மலையில் திடிரென ஏற்பட்ட பனிச்சரிவால் சிக்கி மக்கள் உயிரிழப்பு "என செய்தி எதிரொலி. அகோரி எங்களிடம் கூறிய சில மணி நேரங்களில் அச்சம்பவம் நடைபெற்று உள்ளது. வானொலியின் செய்தியைவிட அவரின் வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது. வானொலியின் சத்தம் அவரின் வார்த்தைகள் முன் தோற்றுவிட்டது. 

   கால்கள் கண் போன போக்கில் நடந்தன. அச்சமயம் அகோரிதான் சிவபெருமானா என சந்தேகம் எழுந்தது. அது உண்மை இல்லை எனத்  தெரிந்தும் ஒரு சந்தேகம். அதுமட்டுமல்லாது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரும்  கடவுள் பெயரைக் கூறி திருடும் கும்பல் என தெரிய வந்தது, வெகு நேரத்திற்குப் பிறகு. " *ஓம்* *நமசிவாய* "என தானாக வாய் உச்சரிக்கத் துவங்கியது. இத்தனைக்கும் அவர் கூறிய சொற்களே முக்கிய காரணம். துயரச் செய்தி ஒரு பக்கம் வாட்டினாலும் அவரின் சொற்கள் எங்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது. " *போதும்* *உன்* *பயணத்தை* *முடித்துக்* *கொள்ளுங்கள்* " என அவர் கூறியது  இன்னும் என் காதில் ஓடிக் கொண்டுள்ளது.....


   ""தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ""


             கொ. பூ. பூவரசி

Post a Comment

0 Comments