கொரோனாவின் வருகைக்காலம் இது. இந்தக் காலத்தைக் கொரானாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் எனப் பிரித்து எழுதும் சூழல் இனிஉலகில் உருவாகும். கடந்த நான்கு மாதங்களில் உலகைத் தலைகீழாய் திருப்பிப் போட்டு கொண்டிருக்கும் கொரோனா எல்லாருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனக்கும்தான்.
மனித வாழ்வில் துயரங்களைச் சேமிக்கச் சொல்லிக் கற்றுக் கொடுத்திருக்கும் கொரோனா என் வாழ்வில் மிகப் பெரிய அதிசயத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆமாம், கடந்த இருப்பந்தைந்து வருடத்திற்குப் பின்னோக்கிப் போய் , நான் இழந்த வாழ்வை திரும்ப உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
நகரவாழ்வின் மீது சீரற்றுக் கிடந்த என் நடை முறை வாழ்வு இப்பொழுதுதான் சீரமைந்திருக்கிறது.
அந்தச் சீரமைந்த வித்தியாசத்தை நானும் என் குடும்பத்தில் உள்ளோரும் உணரமுடிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நகரக்கதியில் இயங்கி அவசர அவசரமாய் ஆக்கி போட்டுக்கொண்டு வேலைக்குச் செல்வதும், வீட்டுக்கு வந்தவுடன் ஓய்வறியாமல் வீட்டு வேலை செய்வதும் என் போன்ற பெண்கள் பலரின் வழமை. உடம்பும் உள்ளமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு திண்டாடி ,அவசரகதியில் இயங்கிய நகர வாழ்வு , இன்று கிராம வாழ்வில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இந்தக் கொரோனா கொடுத்திருக்கிறது.
என்னிடம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றது உள்ளம். அந்த உள்ளத்திற்குள்ளே நெடுங்கனவு ஒன்று இருந்தது. "சிறுபிராயத்திற்குத் திரும்புதல்" என்பதே அது. அந்தக் கனவு இப்பொழுது அரிதாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது வேகவேகமான வாழ்க்கைமுறையில்லை, வேகவேகமான பயணமுறையில்லை.வேகவேகமான இயந்திரம் என்னிலிருந்து கழண்டு விழுந்துவிட்டது. என் கைகால்கள் இப்போதுதான் உயிர்ப்பைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளன. என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பது நான் பிறந்த ஊர். அதனோடு எனக்குள்ள உயிர் உறவு.அதைப் பற்றித்தான் உங்களிடம் சிலாகித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சோனங்குப்பம் கடல்சூழந்த அழகிய மீனவகிராமம். மூன்றுபக்கம் கடலாலும் நான்காவது பக்கம் கெடிலம் ஆறும் சூழ்ந்த என் ஊர் ஒரு தீவுபோல் காட்சியளிக்கும். அப்போதெலாம் எங்கு போவதாயினும் தோணியில்தான் கடந்துதான் செல்ல வேண்டும். அக்கறையிலிருந்து இக்கரைக்கு வர கால் மணி நேரமாவது ஆகும். அந்தநிலை மாறி விட்டது. இப்போது ஆற்றின் மீது மேம்பாலம் கட்டியாகிவிட்டது. ஊரில் இருசக்கர வாகனங்கள் பெருகிவிட்டன. என்றாலும் ஊரின் அழகு கட்டுக் குலைந்துவிடவில்லை.
ஊரினுள் பல்வித மரங்கள் செடிகள் கொடிகள், ஊரைச் சுற்றிலும் நெடுமரங்கள் அரண்களாய் காட்சி தர, ஓங்கி வளர்ந்த பனைகள் விசிற இவ்வெய்யில் காலத்தில் புழுக்கமென்பதே தெரியவில்லை.
இந்த அழகிய ஊரில்தான் அமைந்திருக்கிறது மிகச்சிறிய என்னுடைய அம்மாவீடு. அதைச் சுற்றி தென்னைமரங்கள்,புவரசுமரங்கள், முருங்கைமரங்கள்,வேப்பமரங்களென காடுக்குள்ளிருக்கும் ஓர் இனியகுகை வீடு. அவ்வீட்டில் நான் என் மகள் ,என் தங்கை , தங்கை மகள் , அம்மா ஆகியோருடன் தங்கியிருப்பதைச் சொர்க்கத்தில் இருப்பதாக உணரமுடிகிறது.
கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டமான கடலூர் சோனங்குப்பம் கிராமத்தில் இயற்கை எழில் மணல்மேடுகள் சூழ்ந்த ஊர். காடுகளும் மரங்களும் மணல் மேடுகளும் அமையப் பெற்றவை என்றாலும் கிழக்கே விரியும் வங்காள விரிகுடாதான் அழகின் சாட்சியாக இருக்கிறது. மிக நீண்ட கடற்கரையில் கிடத்தியிருக்கும் கட்டுமரங்களின் மீது உட்கார்ந்து நேரம் போவதே தெரியாமல் கடலின் அழகை இரசிக்கிறேன் . மதியவேளையில் உடல் வெப்பந் தணிக்க கடல் குளியல் செய்கிறேன். வரும் அலைக்கு முகம் காட்டி நீச்சல் பழகுகிறேன். தெளிந்த கடல் சிப்பிகளையும் கிளிஞ்சல்களையும் வாரித் தருகிறது.
அதிகாலையில் எழுந்து நடை பயணம் செய்வதால் உடம்புக்கு மிகவும் உற்சாகமான புதிய உணர்வைப் பெறுகிறேன். நடந்து பழகாத கால்கள் நடைப்பயிற்சியைக் கண்டு அஞ்சவேயில்லை. இப்பொழுது மூட்டுவலிக் கால்கள் மட்டில்லாமல் வெண்மணலில் புதைய ப்புதைய நடக்கப்பழகிவிட்டன. சக்கரங்கள் கட்டி ஓடிக் கொண்டிருந்த என் கால்கள் சாகசம் செய்வதை உணர்கிறேன்.
காலையில் எழுந்தவுடன் சமையல் கட்டுமுன் நின்று அவசரவசரமாய் சமைப்பதற்கு நேரம் எடுத்துக் கொண்ட காலம் போய் , சமையல் கட்டுக்குப் போவதேயில்லை. கிடைக்கும் காய்கள் பழங்களைக் கொறித்துண்ணக் கற்றுக் கொண்டுவிட்டேன். மேலும் கிடைக்கும் கேழ்வரகு கஞ்சி, கம்பங்கூழ் , பழைய சோறுக்கு பழகிவிட்டதால் உடம்பு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ,
கருங்கல் சல்லிகளிலே சொங்கரக்காய், ஆடுபுலியாட்டம் என விளையாட்டுகளில் மூழ்கிப் போய்விட்டேன். அதனால் வயதை மறந்து குழந்தையாகிப் போனது பேரதிசயம். நாள் முழுக்க புத்தகம் முகநூல், புலனத்திலிருந்து விடுபட்டு விட்டது அதிசயத்திலும் அதிசயம்.
எழுபது வயது நிறைந்த என் அம்மா குழந்தையாகிவிட்டாள். நான் அவளுக்கு அம்மாவாகிவிட்டேன். அத்தனை சுறுசுறுப்பு எங்கிருந்து வந்தது என்னம்மாவுக்கு? . அம்மாதான் எங்கள் விளையாட்டுக்குத் தலைவி. அவள் கட்டளைக்கு நாங்கள் பணியாட்கள். அதனால் நான் ஒன்றும் சோம்பேறி ஆகிவிடவில்லை.
காலை எங்களுக்கு சமைக்காத உணவைத் தந்ததால், நேரம் நிறைய கையிருப்பாகியது. தொலைக்காட்சி பெட்டிமுன் அடைபட்டுக் கிடக்கவோ, முகநூல் வாட்சப்பில் தொலைந்து போகவோ ஒருபோதும் விருப்பமில்லை. காரணம் தமிழகம் மறந்து போன பண்பாட்டு விளையாட்டுகளைத் தேடி எடுத்தேன். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து விளையாட ஆரம்பித்தேன். சொங்கரக்காய் , ஏழாங்காய், பகடைக்காய், தாயம் உருட்டுதல் போன்ற பழைய விளையாட்டுகளைக் கூடி விளையாடினோம். அவ்விளையாட்டுகளே எங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டன. இப்போது நேரம் போவதையறியாமல் விளையாடுகிறோம். எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ஓடும் வாழ்வு புதிய கிளைகளை விரித்திருக்கிறது. ஆம் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி விளையாடுகிறோம்.
ஒவ்வொரு நாளும் புதியபுதிய விளையாட்டுகளை விளையாடுகிறோம். ஆனால் அவையெலாம் நான் சிறிய வயதில் கற்றுக் கொண்ட விளையாட்டுகளே. புளியங்கொட்டையில சொங்கரக்காய் அதுல விளையாடுவோம் இல்லாட்டி கருங்கல் ஜல்லிகள் இருக்குல்ல அதுல விளையாடுவோம் .இப்படி மறந்துப்போன பழமையான விளையாட்டுகளை எல்லாம் எங்க அம்மா வந்து விளையாட கத்துக் கொடுத்தாங்க. நாங்க இப்ப ரொம்ப நல்லா அந்த ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம். அப்புறம் அம்மாகிட்ட உட்கார்ந்து ஓய்வு நேரத்துல அவங்க நாட்டுப்புற கதைகள் நிறைய சொல்வாங்க. அவங்க சில நேரங்கள்ல தாலாட்டு பாடல்,ஒப்பாரி ப்பாடல் பாட வைத்து கேட்கிறபோது நெஞ்சம் நெகிழும். தனிமையில் இருந்த என் அம்மாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. தன் பேரக் குழந்தைகளோடு தன்னுடைய பெற்ற மகள்களோடு கூடி இருக்கும் போது அவங்களுக்கு உடம்பு மனசு ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. இப்ப எங்களுக்கு பதிலாக அவங்க வேலை செய்றாங்க . இப்ப நான் அம்மாவாகவும் அம்மா மகளாகவும் மாறிப்போன ஒரு நிகழ்வு சிலிர்க்க வைக்கிறது.
முன்பெலாம் இலக்கியம், சமூகம் சார்ந்த நிகழ்வுகளுக்காக அடிக்கடி வெளியில் செல்வது வழக்கம். இப்ப வீட்டிலிருந்தே இலக்கிய நிகழ்வைப் பார்க்கிறேன். சூம் செயலி வழியாக இலக்கிய,சமூக ஆளுமைகளுடன் உரையாடுகிறேன்.
அடுத்து எனக்கு இது முக்கியமான ஒரு காலகட்டம் .இந்தக் கொரோனா ஒரு பொன்னான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இருபத்தஞ்சு வருஷமா என் நெஞ்சு குழிக்குள் இருந்த ஒரு நாவல், அதை எழுதுவதற்கான ஒரு தருணத்தைக் கொடுத்திருப்பதாக பார்க்கிறேன் . காலை நடைபயணம் போக ,அந்த மரங்கள் சூழ்ந்த இடத்தில் மணல் மேல் உட்கார்ந்துகொண்டு இப்பொழுது "வம்பாமணல்" என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.மொத்தத்தில் இந்த காலம் எனக்குத் துன்பத்தை எடுத்து இன்பமான விஷயங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். மிகச் சமீபத்தில் இறந்த என் கணவரின் இழப்பிலிருந்து விடுபடாமல் இருந்த என்னை மாற்றியமைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இப்போது ஒரு புதுமையான வாழ்வையும் புத்துணர்ச்சியும் பெற்றிருப்பதாக உணர்கிறேன்.
உலகில் கொடிய துயரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலமானது என் கனாக்காலத்தை நனவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதால் வெறுக்கமுடியவில்லை. எனக்கு நல்ல காலமாக விளங்கும் இக்காலம் எல்லோருக்குமான நல்ல காலமாக விளங்க வேண்டும் என்பதே பேரவா என நினைத்து மகிழும் இவ்வேளையில்தான் நடக்கக்கூடாதது
நடந்துவிட்டது.
ஆம் எனக்கும் என் மகளுக்கும் என் அம்மாவுக்குமாகக் கொரோனா வந்துவிட்டது..அதனால் நாங்கள் பட்டபாடு
சொல்லி மாளாது. இந்தக் கொரோனா உலகில் யாரையும் மிச்சமாக வைக்காது என்பதை ஆழப் புரிந்து கொண்டோம்..நீங்கள்..?...
முனைவர். பெண்ணியம் செல்வகுமாரி
புதுச்சேரி.

0 Comments