மூத்தோர் சொல்லும் கதை
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
முத்தையனுக்கு இரண்டு நாட்களில் எண்பதைத் தொட்டுவிடும். முத்தையன் அவர்கள் அந்த காலத்து எஸ். எஸ். எல். சி. ""மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "" என்பது அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் ஒரு சண்டை கூட வந்ததில்லை என்பதே நிதர்சனமான உண்மை. முத்தையன் தீவிர அண்ணாமலை பக்தர். மனைவியும் அப்படித்தான். இருவரும் விவசாயம் செய்து ரகுபதியை படிக்க வைத்தனர். விவசாயம், கால்நடை என இவ்வளவே இவர்களின் வாழ்க்கை. முத்தையன் குடும்பம் ஊர்மக்களிடையே பெறும் மதிப்பை பெற்று இருந்தது.
மகன் ரகுபதி, உயர்கல்வி படித்து முடித்து கல்லூரிப் படிப்பிற்கு தயாராக இருந்தான்.முத்தையன் விவசாயம் சம்பந்தமாக படிக்கச் சொன்னார். "பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிப்பது போல "அவன் தன் அப்பாவைப் பார்த்துச் சிரித்தான். தன் மகன் முதல் முதலாக முத்தையனை ஏளனமாக பார்த்தான். முத்தையனின் மனைவிக்கு தூக்கி வாரிப்போட்டது. பெற்றோரின் பேச்சை முதன் முதலில் மீறினான். தன்னுடைய விருப்பத்திற்கு படித்து முடித்து வேலை வாங்கி பெற்றோரின் அனுமதியின்றி வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான்.
"தமிழ்நாட்டில் இல்லாத வேலையா"? என்று பெற்றோரின் எண்ணம். முத்தையனும் அவரது மனைவியும் வயதான காலத்திலும் விவசாயம் செய்து வந்தனர். ஊர்க்காரர்கள் முன்பு தன் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசுவர்.
விவசாயத்தில் வரும் பணத்தை சரிபாதி ஏழை மக்களுக்கு தானம் செய்துவிடுவர். இரவு தூங்குவதற்கு முன்பு, மகனை நினைத்துப் புலம்பும் மனைவியை கண்ணால் கூட காண இயலாது.
மகன் தன் விருப்பத்திற்கு இருந்துவிட்டுப் போகிறான் என தங்களுக்கு தாங்களே ஒருபுறம் சமாதானம் செய்து கொண்டாலும், மகன் தன்னிடம் இவ்வாறு நடந்திருக்க வேண்டாமே என்ற கவலை மறுபுறம்.
"ஆசை ஆசையாய், பாசம் காட்டி வளர்த்த மகன் தன்னுடன் இல்லாமல் வெளிநாட்டில் போய் வசிக்கிறான்". இது ஊர்க்காரர்கள் சிலருடைய பேச்சு. எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் முத்தையனும் அவரது மனைவியும் காலத்தை நகர்த்தினர்.
ஒரு நாள், காலை பத்து மணி, வயலில் வேலை ஆட்களுடன் ஒருவராக முத்தையனும் அவரது மனைவியும் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், "ஐயா பெரியவரே, உங்களுக்கு கடிதாசி வந்துருக்கு வந்து கையெழுத்து போட்டுட்டு வாங்கிக்கோங்க " ,தபால்காரரின் சத்தம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
பிரித்து படித்த முத்தையனுக்கு நெற்பயிர் போல முகம் வாடியது. அக்கடிதம் மகன் ரகுபதியிடமிருந்து. அக்கடிதத்தில்,
மகன் ரகுபதி பெற்றோரை நலம் விசாரித்திருந்தான். தான் கைநிறைய சம்பளம், கார், ஏசி என்று வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும், பெற்றோர் சொல்லை கேட்டிருந்தால் வேகாத வெயிலில் வேலை செய்து கஷ்டப்பட்டிருக்கக்கூடும் என்று கூறியிருந்தான். மேலும் அவன் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவள் படித்தவளாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருக்கிறாள் என்பதை குறிப்பிட்டிருந்தான். இதே தன்னுடைய பெற்றோர் பார்த்திருந்தால் சடங்கு ,சம்பிரதாயம், உறவினர்கள் என்று ஒரு நாள் கூத்து நடந்திருக்க்கூடும் என்று அவன் திருமணத்தை ஏளனமாக கூறியிருந்தான். இதுவே அவனின் கடித செய்தி.
தங்களை கேட்காமல் மகன் இன்னொரு முடிவு எடுத்துவிட்டான் என்று எண்ணி மனம் உடைந்துவிட்டனர். ஊர்க்காரர்களோ வஞ்சப்புகழ்ச்சியணி பாடத் தொடங்கிவிட்டனர்.
வருடங்கள் கடந்தன.. வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். முத்தையனுக்கு செய்தித்தாள் வாசிக்கவில்லை என்றால் அந்த பொழுது போகாது. அப்படி வாசித்துக் கொண்டிருக்கையில், மூன்றாவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தி, அதாவது தன் மகன் வேலை செய்து வரும் நாட்டில் திடீரென ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலால் வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள், மருத்துவமனைகள் எனஅனைத்தும் தாக்குதலுக்கு உள்ளானது. நூற்றுக்கணக்கான மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடும் முயற்சிக்கு பின்னர் அண்டை நாட்டிலிருந்து வேலை செய்ய வந்த மக்கள் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
செய்தியை அறிந்த பிறகு முத்தையனும் அவரது மனைவியும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால் ஓரிரு தினங்களில் மகன் ரகுபதி , மருமகள் ப்ரீத்தாவுடன் கைக்குழந்தையும் வந்தது. இத்தனை காலம் இருந்து வந்த கோபம், கவலை என அனைத்தும் குழந்தையை பார்த்த பிறகு பறந்தோடியது. முத்தையனின் மனைவி குழந்தையை எடுத்து முத்தமிட்டாள். குழந்தை சினுங்கியது. மாமியார் குழந்தையைத் தொடுவது மருமகளுக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டு மருமகளல்லவா...
முத்தையனின் மனைவி மூன்று பேருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றாள். கிராமத்துப் பழக்க வழக்கங்கள் எதுவும் மருமகளுக்கு பிடிக்கவில்லை. ரகுபதிக்கோ வேலைபோன கவலை. அதனால் மனைவியை அவன் கவனிக்கவில்லை.
மருமகளின் நடவடிக்கை, ஆடை பழக்கம் என ஒவ்வொன்றும் காண்போரை முகம் சுளிக்க வைத்தது. ஆனால் அவளுக்கோ கிராமத்துப் பழக்க வழக்கம் முகம் சுளிக்க வைத்தது.
நாட்கள் சென்றன. கிராம வாழ்க்கை பிடிக்காத ப்ரீத்தா குழந்தையை விட்டுவிட்டு சென்றுவிட்டாள். ரகுபதிக்கு வெளிநாட்டு மனைவியின் உண்மை ரூபம் தெரியவந்தது. "குழந்தையை விட்டுச் சென்ற தாய்ப்பாசம்" என அனைவரும் வசைபாடினர். மகனின் கவலையை அறிந்த பெற்றோர் அவனுக்கு ஆதரவாக பேசினர்.
ரகுபதியும் நடந்ததை கனவாக எண்ணி மறந்துவிட்டு தனது பணியை விவசாயத்தில் செலுத்தினான். கைக்குழந்தை ஆறுமாத குழந்தையானது. பெற்றோரின் ஆசைப்படி விவசாயம் செய்தான். மற்றொரு வேலைக்கு கடிதம் வந்தும் போகவில்லை.
சிலமாதங்கள் கழித்து பெற்றோரால் பார்த்த பெண்ணை முழுமனதோடு திருமணம் செய்துகொண்டான். இரண்டாவது மருமகள் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் புத்திசாலியாகவும் பொறுப்பான பெண்ணாகவும் இருந்தாள். குழந்தையையும் குடும்பத்தையும் தன்னுடைய அன்பால் கட்டிப்போட்டாள். முதல் மனைவி ப்ரீத்தாவை எண்ணி வெட்கமடைந்தான். இரண்டாவது மனைவி லட்சுமியை எண்ணி பெருமையடைந்தான்.
"சித்தி என்றாலே கொடுமைக்காரி " என்ற வாசகத்தை பொய்யென நிரூபித்தாள். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் திடீரென ரகுபதியின் பெற்றோர் காலமாகினர். ரகுபதி பெற்றோரை நினைத்து மிகவும் வருந்தினான்.
காலங்கள் கடந்தன. விவசாயத்தை முழுமூச்சாகக் கருதினான். கணவன் மனைவி இருவரும் ரகுபதியின் பெற்றோரைப் போன்றே வயலில் வேலை செய்தனர். ஒரு நாள் வயலில் வேலை முடிந்து வீடு செல்லும் வழியில், ஒரு குழந்தை மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தது. அக்குழந்தை படித்தலில் , ரகுபதியின் காதில் " _மூத்தோர்_ _சொல் கேள்_ என்று விழுந்தது. தன்னையறியாமல் ரகுபதியின் கண்கள் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள்.
***** ***** *****
-கொ.பூ.பூவரசி

2 Comments
Thank you for your participation
ReplyDeleteகொ.பூ.பூவரசி
அருமை அண்ணா..
ReplyDelete