**** அன்னை ஓர் ஆலயம் | Tamil Short Story about Old Age and Mother-Son Relationship

அன்னை ஓர் ஆலயம் | Tamil Short Story about Old Age and Mother-Son Relationship

           அன்னை ஓர் ஆலயம் |  A Tale of Motherhood and Redemption






 

                 இரவும் இன்றி பகலும் இன்றி வானம் புதுவித அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தி நேரம்.நிலாப்பெண் வானதேவன் மடியினில் உலாவரும் நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.நிலா மங்கையின் வரவைக் காண வந்த நட்சத்திரத்தோழியர்கள் ஆங்காங்கே கண்சிமிட்டிக்கொண்டிருந்தார்கள்.வஞ்சமின்றி இயற்கை அன்னை தன் அந்திநேர அலங்காரத்தின் அழகை முழு உலகுக்கும் வாரி இறைத்துக் கொண்டிருந்தாலும் அதை எல்லாம் இரசிக்கும் எண்ணம் துளியுமின்றி கரை புரண்டு ஓடும் வெள்ளமாய் விழிகளில் இருந்து வழிந்தோடும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் கனகம்மா.


                காலையில் மகன் சொன்ன வார்த்தைகள் இன்னும் செவிகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. "சீச்சீ  என்னம்மா இது அளவாக சாப்பிடவேண்டியதுதானே? கண்டதையும் முழுங்கிட்டு வாசலில கக்குறதா? அருவருப்பாக இருக்குது.இனிமேல் வீட்டுக்கு பின்னால் ஒரு அறை இருக்கு அதில் போய்க்கிட.வாசலில இருந்து இப்படி அசிங்கப்படுத்தாத." இது சாப்பிடும் போது சமிபாட்டு கோளாறால் வீட்டு வாசலில் வாந்தி எடுத்து விட்ட கனகம்மாவை நோக்கி மகன் கணேஷ் கூறிய அக்னி வார்த்தைகள் அவை.

                  "இதை கெதியா கழுவுங்கோ.எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது."என்று மருமகள் மாலதி முகம் சுளித்ததை விட  "கிழடு கெட்டையளை வீட்டில் வைச்சிருந்து எவ்வளவு தொல்லை".என்று முணுமுணுத்தது தான் அதிகம் வேதனையைத் தந்தது கனகம்மாவுக்கு.வீட்டைக் கழுவி விட்டு தனது கைத்தடியை ஊன்றியபடி மெதுவாக நடந்து தனது அறைக்கு வந்தாள்.


                     அழுகையை அடக்க முடியாமல் வாய் விட்டு அழுதாள் கனகம்மா.கணவன் சாம்பசிவத்தின் புகைப்படத்தின் முன்னால் மண்டியிட்டு "என்னை மட்டும் தனியாக தவிக்க விட்டு யோயிட்டீங்களே" என்று அழுதவளை "பாட்டி அழுவாதேங்கோ பாட்டி"என்றொரு மழலைக்குரல் தடுத்தது.கண்களில் நீர் நிரம்பியபடி நின்ற வருணனை கண்டதும் "என்ர பேராண்டி தங்கமே பாட்டி அழுவேல்லடா கண்ணா" என்று அவனை அணைத்துக்கொண்டாள்  கனகம்மா.


                 "பாட்டி நீ ராசி இல்லையாம் உன்ர முகத்தில் முழிக்கவே கூடாதாம் அப்பா சொல்லிச்சு"என்று குழந்தை சொன்னதைக் கேட்டதும் நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது.பூமி பிளந்து தன்னை விழுங்காதா என்று ஏங்கினாள் கனகம்மா.ஊமையாய் அழுவதைத் தவிர வேறு தெரியவில்லை.சொந்தமாக இருந்த வீட்டையும் ஒரே மகனென்று கணேஸிற்கு கொடுத்தாகி விட்டது.சாம்பசிவம் உயிரோட  இருக்கு மட்டும் கனகம்மா

வுக்கு எந்த கஷ்டமும் வரவில்லை.ஆனால் இப்போது?. மகனின் புறக்கணிப்பும் மருமகளின் முகச்சுளிப்பும் தாங்க முடியவில்லை.உடலில் சக்தி இருக்கும் வரை அந்த வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருந்தாள் கனகம்மா.ஆனால் எண்பது வயதிலும் அப்படியே இருக்க முடியுமா? முதுமையின் கொடுமையும் பிள்ளையின் வெறுப்பும் கனகம்மாவைத் தீயென சுட்டுப்பொசுக்கின.



                   எந்த பிள்ளையின் முகம் காண பத்து மாதங்கள் தவம் கிடந்தாளோ  எந்த பிள்ளைக்கு தன் இரத்தத்தை பாலாக்கி கொடுத்தாளோ எந்த பிள்ளைக்காக ஊனுறக்கமின்றி இருந்தாளோ எந்த பிள்ளையை தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்தாளோ அந்த பிள்ளையே இன்று தன்னை பார்த்து சீச்சி என்று விட்டதே. இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறம் என்று அழத்தோன்றியது.அந்த மனுஷன் புண்ணியவான்.இப்படி எல்லாம் அனுபவிக்காமல் நிம்மதியாக போய்ச்சேர்ந்திட்டார் என்று கணவன் நினைவில் கண்களில் வடிந்த கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள் கனகம்மா.

                    இருள் சூழத்தொடங்கியது.மணி எட்டை நெருங்கியிருந்தது.வீட்டுக்குள் மகனின் சத்தம் கேட்கவில்லை.ஒருநாளும் கணேஷ் இப்படி தாமதமாகியதில்லையே என்று பதறியது அந்த தாயுள்ளம்.மெதுவாக எழுந்து கைத்தடியை ஊன்றியபடி வீட்டு வாசலுக்கு வந்தாள்.வாசலில் கதிரையில் சாய்ந்தபடி தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்த மாலதியிடம் " ஏம்மா கணேஷ் இன்னும் வரேல்ல? நேரமாகுதில்ல" என்று மெல்லக்கேட்டாள்.நிமிர்ந்து பார்த்த மாலதி "வந்திடுவார்.இப்ப இதில் நடந்து வந்து விழுந்து தொலைக்காமல் ஓரமாய் போய் இருங்கோ" என்று சொல்லவும் கணேஷின் கார் வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.மகனைக்கண்ட மகிழ்ச்சியில் கைத்தடியை ஊன்றியபடி தனது அறைக்குள் சென்றாள் கனகம்மா.


                    கணவனின் புகைப்படத்தை பார்த்தபடி இருகால்களையும் நீட்டி அமர்ந்தவளிடம் "பாட்டி இந்தாங்கோ வடை சாப்பிடுங்கோ" என்றபடி வடையை நீட்டினான் வருண்.குழந்தையை வாரி அணைத்தபடி "என்ட ராசா இந்த கடலை வடையெண்டா உன்ர அப்பனுக்கு ரொம்பவும் பிடிக்குமடா.இதைக்கொண்டு போய் அப்பாட்ட குடு" என்று புன்னகையுடன் கூறினாள். "சரி பாட்டி" என்று கூறி விட்டு ஓடினான் வருண்.

                     அன்று ஞாயிற்றுக்கிழமை.விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டில் கும்மாளமிட்டபடி இருந்தார்கள்."நான் மட்டும் தனியாக சமைக்கிறன்.உங்கட அம்மாவை கொஞ்சம் உதவி செய்யச்சொல்லுங்கோவன் " மாலதியின் குறையை கேட்டு தாயிடம் விரைந்த கணேஷ் "அம்மா எழுந்திரு.மாலதிக்கு சமைக்கிறதுக்கு உதவி செய்யன்.பாவம் தனியாக கஸ்டப்படுறாள்.கெதியா வா " என்று அடிக்குரலில் கூறிவிட்டு கையோடு அவளை இழுத்துக்கொண்டு போனான் கணேஷ். "பாத்து ராசா.மெதுவாக போப்பா.காலில் கல்லு குத்திடும்" என்று முனகிய கனகம்மாவிடம் "குத்தினால் குத்தட்டும்.செத்தா போயிடப்போறாய்" என்று கேட்டான் கணேஷ்.


                   சிறுவயதில் கணேஷுக்கு காலில் கல் குத்திவிடும் என்று சாம்பசிவமும் கனகம்மாவும் மாறி மாறி தூக்கிக்கொண்டுதான் செல்வார்கள்.ஆனால் இன்று அந்தப்பிள்ளை என்ன வார்த்தை சொல்லிப்போட்டுது.கண்களில் நிரம்பிய கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.கனகம்மாவைக் கண்டதும் தலைவலி என்று ஒதுங்கி கொண்டாள் மாலதி.அன்றைய சமையல் கனகம்மாவின் பொறுப்பாகி விட்டது.உடம்பு ஒத்துழைக்காமல் விட்டாலும் மிகவும் சிரமப்பட்டு மகனுக்கு பிடித்த கத்தரிக்காய் கூட்டு, வாழைக்காய் பொரியல், எலுமிச்சை சாதம் என்று சமையலை செய்து முடித்தாள் கனகம்மா.சாப்பிடும்போது "சின்ன வயசுல கணேஷ் கத்தரிக்காய் கூட்டு இல்லாமல் சாப்பிடவே மாட்டான்.ஒருநாள் கத்தரிக்காய் கூட்டு கேட்டு அடம்பிடிச்சு சாப்பிடவே மறுத்துட்டான்.இரவு ஏழு மணிக்கு அரைக்கிலோ மீற்றர் நடந்து கத்தரிக்காய் வாங்கி வந்தார் இவன்ர அப்பா.அதுக்கு பிறகு சமைச்சு குடுக்கத்தான் சாப்பிட்டவன்.அந்தளவுக்கு அவனுக்கு பிடிக்கும்" என்று அந்தக்கால நினைவுகளை மீட்டியபடி கனகம்மா கூறவும்" போதும் போதும் தொணதொணவென்று அலட்டாமல் சாப்பிடு" என்று சலித்துக்கொண்டான் மகன்.

              அன்று முன்பள்ளிக்கு போய் வந்த வருண் "அம்மா அம்மா எனக்கு கதை சொல்லித்தாங்கோ" என்று கேட்டான்."டேய்.அம்மாவுக்கு கதையெல்லாம் தெரியாதேடா.அப்பாட்ட போய் கேள் கண்ணா"என்று மகனை அனுப்பி விட்டு தொலைக்காட்சி நாடகத்தில் கவனத்தை செலுத்தினாள் மாலதி."அப்பா எனக்கு கதை சொல்லித்தாங்கோ.இல்லாட்டி நாளைக்கு ரீச்சர் அடிப்பா"என்று கூறிய வருணை பார்த்து" கதைக்கு நான் எங்கடா போவன்? ஏதாவது புத்தகத்தை வாசிச்சுப்பாரு.கதை கிடைக்கும்" என்றான் கணேஷ்.கண்களில் நீர் வடிய நின்ற பேரனை பார்த்து"பேராண்டி பாட்டி இருக்கிறன்டா கதை சொல்ல.உனக்கு காக்கா கதை வேணுமா?நரிக்கதை வேணுமா? என்று கனகம்மா கேட்டதும் "பாட்டி எனக்கு நரிக்கதை சொல்லுங்கோ" என்று அவளை அணைத்தபடி துள்ளிக்குதித்தான் வருண்.அவர்கள் செல்வதை ஓரக்கண்ணால் பார்த்தபடி உடற்பயிற்சியில் கவனத்தை செலுத்தினான் கணேஷ்.மறுநாள் "பாட்டி சொல்லித்தந்த கதை நல்லம்.எல்லாரும் என்னை பாராட்டினாங்கள்"என்று மகிழ்ச்சியில் துள்ளினான் வருண்.



                    அன்று கனகம்மாவுக்கு உடல் மிகவும் அசதியாக இருந்தது.கை கால் எல்லாம் வலித்தது.தலை சுற்றியது.விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அருகில் இருந்த தூணை பிடித்துக்கொண்டு நின்றாள் கனகம்மா."ஐயோ மகனே.எனக்கு தலை சுத்துதுப்பா.ஓடி வா.கணே...ஷ்" என்று முனக முடிந்ததே தவிர குரல் எழும்பவில்லை.பாட்டியை காண வந்த வருண் பயந்து விட்டான்."அம்மா அப்பா ஓடிவாங்கோ.பாட்டியை பாருங்கோ" என்று கத்தினான்.யாரும் வரவில்லை.வீட்டுக்குள் ஓடினான் வருண்.தொலைக்காட்சியின் முன்னால் மாலதியும் கணினிக்கு முன்னால் கணேஷும் அமர்ந்திருந்தனர்.

                  "அம்மா அம்மா பாட்டிக்கு பாட்...டிக்...கு " என்று திக்கித்திணறிய வருணை பார்த்து"என்னடா சத்தம் போடாத.எதுவும் விளங்கேல்ல"என்று சலித்துக்கொண்டாள் மாலதி.கணேஷிடம் ஓடிவந்து"அப்பா ஓடிவாங்கோ.பாட்டிக்கு ஏலாதாம்." என்ற வருணை திரும்பி பார்த்த கணேஷ்" டேய்.இருடா.இந்த வேலையை முடித்துட்டு வாறன்" என்றான்.வருணுக்கு கோபம் வந்துவிட்டது.அருகில் இருந்த கண்ணாடிக்குவளையை எடுத்து கீழே எறிந்து உடைத்தான்.அதிர்ச்சியில் திரும்பினர் பெற்றவர்கள்."நான் பாட்டிக்கு ஏலாதாம் என்று சொல்லுறன்.நீங்கள் இப்ப வாறீங்களோ இல்லையோ" என்று கோபத்தில் கேட்ட மகனை பார்த்து எதுவும் பேசாமல் கனகம்மாவின் அறைக்கு விரைந்தனர் இருவரும்.அங்கே மயங்கிச்சரிந்து

கிடந்த கனகம்மாவைக்கண்டதும் " அம்மா " என்று அலறியபடி தாயை தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தான் கணேஷ். "பாட்டி பாட்டி" என்று அழுதுகொண்டிருந்தான் வருண்.

                 கனகம்மாவை பரிசோதித்து விட்டு வெளியே வந்த வைத்தியர் "அவங்களுக்கு உடம்பு பலவீனமா இருக்குது.நீங்கள் போய் பார்க்கலாம்.ஒரு மணித்தியாலத்துக்கு பிறகு குளுக்கோஸ் ஏத்துறம்" என்று கூறிவிட்டு சென்றார்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த ஒரு வயோதிகப்பெண்மணி " நீதான் கனகம்மாவின்ர மகனா?உன்ர பெயர் கணேஷ் தானே "என்று கேட்க, "ஆமாம் நான்தான்.உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று ஆச்சரியமாக கேட்டான் கணேஷ். 



                 " நான் தான் உன்ர அம்மாவுக்கு பிரசவம் பார்த்தேன்.கனகம்மாவுக்கு நீயெண்டால் உசிர்.உன்னை நிலத்தில் கூட நடக்க விடமாட்டாள்.அவளுக்கு பாகற்காய் கூட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும்.அது வயித்துல இருக்கிற குழந்தைக்கு ஆகாது என்று நான் சொன்னதால பாகற்காயையே மறந்து போனவள் உன்ர அம்மா.என்ர மகன் என்னை ராணி மாதிரி பாத்துப்பான்.என்று அடிக்கடி சொல்லுவாள்.இப்ப அவள் ரொம்பவும் மெலிந்திட்டாள்.உன்ர அம்மா உனக்காக தன்னையே தியாகம் செய்தாள்.அவளை நல்லபடியாக பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு அந்தப்பெண்மணி சென்றார்.

                சிலையென உறைந்து நின்றான் கணேஷ்.குற்ற உணர்ச்சியில் குறுகிப்போனான்.தான் தாயை நடத்திய விதமும் அந்த தாய் தனக்காக நடந்த விதமும் அவன் கண்முன்னே வந்து நிழலாடின.ராணி மாதிரி பார்த்துப்பேன் என்றார்களே.வேலைக்காரி ஆக்கிவிட்டேனே.பாவி பாவி என்று தன்னையே நொந்து கொண்டான் கணேஷ்.வீட்டுக்கு அழைத்து சென்று இனிமேலாவது அம்மாவை ராணி மாதிரி பார்க்கோணும் என்று மனதிற்குள் நினைக்கும் போது அவன் விழிகள் அருவியென கண்ணீரை சிந்திக்கொண்டிருந்தன.இவற்றையெல்லாம் பார்த்து கொண்டு நின்ற மாலதி அவனருகில் வந்து " தாயில்லாப்பிள்ளை என்று என் மேல் தாய் மாதிரி பாசம் காட்டினவா.நான்தான் அவவை கஸ்டப்படுத்திட்டன் "என்று கண் கலங்கினாள். "அப்பா பாட்டியை பாப்பம் வாங்கோ" என்று வருண் கூறவும் இருவரும் தாயை நோக்கி விரைந்தனர்.


                      தாயின் கைகளை பற்றிய கணேஷ்" அம்மா இந்தப்பாவி மகனை மன்னிச்சிடுங்கோ.உங்களை எவ்வளவோ கஸ்டப்படுத்தீட்டன்" என்று அழுதான். "என்னையும் மன்னிச்சிடுங்கோ அத்தை" என்று கண்கலங்கினாள் மாலதி. "என்ர ராசா. உங்களை போய் நான் கோவிப்பேனா? நீங்கள் ரண்டு பேரும் நூறு வருஷம் சந்தோஷமா வாழோணும் ராசா" என்று தன் நடுங்கிய கைகளை தூக்கி வாழ்த்தினாள் கனகம்மா.வாழ்த்திய கைகள் கீழே சரிய விழிகள் கணேஷை நோக்கியபடி விழித்திருக்க அந்த புண்ணிய ஆத்மாவின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தது.கதறி அழுதனர் கணேஷும் மாலதியும்.பாட்டி பாட்டி என்று துடித்துப்போனான் வருண்.

                     தம் குழந்தைகளை கண்ணின் மணியென வளர்க்கும் தாய் தந்தையர்களை அவர்களது முதுமைக்காலத்தில் குழந்தைகளை போல கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் கடமை ஆகும்.ஒவ்வொரு முதியவர்களும் அனுபவத்தின் உறைவிடம்.அறிவுச்சாகரம் என்பதை உணர வேண்டும்.முதுமையில் அவர்களுக்கு வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுக்க வேண்டும்.இதை உணராமல் விட்ட பாவத்துக்கு இன்னமும் பரிகாரம் தேடிக்கொண்டிருக்கின்றான் கணேஷ்.தினம்தினம் கனகம்மாவினதும் சாம்பசிவத்தினதும் புகைப்படத்தின் முன்னால் கண்ணீர் விட்டு மனதிற்குள் கதறுவான் கணேஷ்.அவனுக்கான பரிகாரம் காலத்தின் முடிவாகும்.



                      ""அம்மன் கோயில் எல்லாமே அம்மா உன் கோயிலம்மா"" 

                   

                     முற்றும்.





TAGS: #motherhood, #sacrifice, #redemption, #oldage, #family, #relationships #Tamilshortstory #Oldage #Motherandsonrelationship #Regret #Forgiveness #Love #Respect


This poignant short story explores the complex relationship between a mother and her son, highlighting the sacrifices made by mothers and the importance of honoring them in their old age. Annai or Aalayam" is a heartwarming Tamil short story about an elderly woman and her estranged son. The story explores themes of old age, mother-son relationship, regret, forgiveness, love, and respect.



Post a Comment

0 Comments