**** நுகர்தலில் நகரும் பயணம்

நுகர்தலில் நகரும் பயணம்



வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 






**************************

நுரையீரலை புரட்டி குமட்டிக் கொண்டிருந்த பீடி நாற்றத்திலிருந்து விடுபட மூக்கை பொத்திக் கொண்டு நகர்ந்து நின்றேன். 


காற்று வெளியின் பனி படர்ந்திருந்த விடியற்காலை மௌனத்தை உடைத்து சல்லென வந்து நின்றது பழையரச மங்கலம் தாண்டி வேப்பூர் வரை செல்லும் பேருந்து. நாலைந்து மக்களோடு இடித்துக்கொண்டு ஓடி பேருந்தின் படிகளை அடைந்தேன். 



"மொழம் பத்துரூவா மொழம் பத்துரூவா.... அக்கா மொழமே பத்ரூபா தாங்கக்கா வாங்கிக்கிறீகளா "  கூவிக்கொண்டே வந்த பூக்காரி என்னை கடக்கும் போது வேணுமாக்கா  என்று  மறக்காமல் கேட்டு விட்டு சென்றாள். பேருந்து முழுவதும் முல்லை பூ படர்ந்திருந்த பூக்காரியின் மணமாகவே மூக்கை துளைக்க சன்னலோர இருக்கையை பிடித்துக்கொண்டேன்.


பூக்களின் வாசனையை தூக்கி எறியும் கருவாட்டு வாசனை பாதி வழியில் பெண்ணங்கோன நிறுத்தத்தில் ஏறிய மூதாட்டியின் கூடையிலிருந்து ஆளை தூக்கியது. 


"கருவாடு தின்னு எத்தன நாளு ஆகுது கருவாடே மறந்து போச்சு  சட்டி நிறைய சமச்சி வச்சி ஆச தீர திங்கனுமென நினைத்துகொண்டிருக்க எனக்கான நிறுத்தம் என்னை பேருந்தை விட்டு வெளியே தள்ளியது.


"எம்மா கண்ணு இந்த கட்டபைய கொஞ்சம் தூக்கி தரியா நானு உள்ள ஏறிக்கிறேனு சொன்னவாறே தாத்தா பேருந்தில் ஏறிக் கொண்டார்.


புதினாவும் கொத்தமல்லி கட்டும் நிறைந்திருந்த அந்த பையை எடுத்து அவரிடம் தந்தேன். 


அவர் நன்றி சொல்லும் முன் பேருந்து ஒரு சொடக்கிட்டு நகர்ந்தது.


புதினா கொத்தமல்லி வாசனை உடல் முழுவதும் சுற்றி வளைத்து பரவிக் கிடந்தது. அம்மா அரைக்கும் புதினா துவையலை மருதாணியென வைத்துக்கொண்டு சுவைத்த ஞாபகம் வந்தது போல எச்சில் சுரந்தது. மிச்சத்தை அள்ளிக்கொண்டு ஊரை நோக்கி திரும்பினேன். பழையரச மங்கலம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகைக்கு கீழே கிழுமத்தூர் மூன்று கிலோ மீட்டரென குறிக்கப்பட்டிருந்தது.


என்னை கவனிக்காமல் பால் கறந்து கொண்டிருந்தவரிடம்

"ஐயா இங்க ஊருக்குள்ள போக ஏதாவது வண்டி வருங்களா"  என விசாரித்தேன்.


வண்டிலாம் ஒன்னும் வராதும்மா யாருனா மோட்டார் வண்டில வந்தா கேட்டா ஏத்திட்டு போவாங்க மத்தபடி எந்த வண்டியும் வராதும்மா நடந்து தான் போகனும் " பதில் சொன்னபடியே அவர் வேலையில் கவனமாக இருந்தார்.


நான் எப்போதும் நடந்த செல்லும் பாதை தான். பள்ளி படிக்கும் போதும் கல்லூரி சென்ற போதும் காலை மாலையும் நடந்தும் ஓடியும் கொண்டாடிய அதே பாதை தான் திருமணமாகி வெளியூர் சென்றதாலோ என்னவோ பாதை புதிதாக மனதை புறக்கணிக்கிறது. நடந்தே தீரவேண்டுமென முடிவெடுத்த பிறகு நடக்க துவங்கினேன்.


ஆவாரம் பூக்கள் அடர்ந்திருந்த சாலையோரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் வழி மறித்து பறந்து கொண்டிருந்தது. அவற்றை பிடிக்க துளியும் விருப்பமில்லை. இரண்டு மூன்று ஆவாரம் பூக்களை பறித்து வாயில் மென்றபடி நடந்தேன்.


கொல்லைகளில் சோளம் பயிரிட்டு இடைவெளியற்ற புற்கள் போல அரும்பி நின்று கொண்டிருந்தது. பள்ளி முடிந்து சென்ற காலத்தில் சோளம் களவாடி சுட்டு தின்ன சுவை கொஞ்சம் கூடியிருந்தது மனதுக்குள்.


சிறிது நேரத்திற்குள்ளாகவே கால்கள் சோர்ந்து விட்டன. நடை தளர்ந்த கால்கள் ஓய்வை தேடியது. இன்னும் கொஞ்சம் தாண்டி சென்றால் அந்த பெரிய ஆலமரத்தடியில் அமரலாமென நடையை துரிதப்படுத்தினேன்.


அருகே செல்ல செல்ல  மனம் தளர்ந்து போனேன். ஆலமரத்துக்கு பதில் ஓங்கியிருந்த கட்டிடத்தில் சின்னபொண்ணு - செல்லமுத்து இல்லமென பொறிக்கப்பட்டிருந்தது. எதுவும் நிரந்தரமில்லை என்ற மனம் திருமணமான போதே என்னை பீடித்துக் கொண்டதால் சின்னதாக ஒரு இரக்கம் மட்டும் ஆலமரத்தை சுற்றிவிட்டு நகர்தது. 


" யாருமா நீயி யாரு வூட்டுக்கு போற " என்று கேட்ட அந்த வீட்டு பெரியவர் என்னை கவனித்திருந்ததை அறிந்தேன்.


" குமாரு பொண்ணுங்க ஊருக்குள்ள போறேன் கும்பகோணத்துல கட்டிக்கொடுத்திருக்காங்க " வேறு கேள்வி முன் நைசாக அவ்விடத்தை புறக்கணித்து நடந்தேன். 


போக போக பாதை நீளுவது போலவே வலுவிழந்து நடந்து கொண்டிருந்தேன். சிறுவயதில் நண்டு பிடித்து இடித்து ரசம் குடிக்கும் ஏரியின் மதகு கண்ணில் பட்டதும் ஊர் நெருங்கி விட்டதை உறுதிபடுத்திக் கொண்டேன். உடைந்து நீரற்று மணல் அடைத்து கிடந்த மத்தில் ஓடிய நீரைப் போலவே காணமால் போன வாழ்வு என் சுமையை அதிகப்படுத்தியது.


மதகின் கடைசி அடையாளமாக திருகு  மட்டும் நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் ஏரிப்பாதை கண்ணில் பட்டது. ஏரிபாதை வழியே நடந்தேன். புளியம்பூக்கள் களிமண் தெரியாமல் குவிந்து கிடந்தன.  காலணிகளை கழட்டி மென்மையாக பூக்களை மிதித்து சுகம் கண்டேன். 


பிஞ்சு குழந்தை விரல் பிடித்தது போல பாதங்கள் உணர்ந்தது.  காலணிகளை மாட்டிக்கொண்டு புளியம் பிஞ்சுகளை கொஞ்சம் பறித்துக் கொண்டேன். 


ஒன்றிரண்டு பிஞ்சுகளை வாயில் போட்டுக்கொள்ள முகம் சுருங்கி பற்கள் கூசி எச்சில் ஊற்றும் புளிப்பை சுவைத்தேன்.


கீச் கீச்சென கத்தியபடி மர பொந்திலிருத்து விழுந்த ரோமம் முளைக்காத மழுக்கை கிளி குஞ்சை மீண்டும் எடுத்து பொந்தில் போட்டுவிட்டு நடந்தேன்.


அவ்வளவு தான் வந்துவிட்டேன். சிறிது தூரம் நடக்க நடக்க மூக்கை அறுக்கும் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை.


பாதையின் இருபுறமும் அமர்ந்திருந்த பெண்களை கடப்பது அருவெறுப்பான நிகழ்வாகிப் போனது.  கால் வைக்க கூட இடமில்லாமல் செய்திருந்தது நேற்று பெய்திருந்த மழை. நரவுகளை கண்கள் பார்த்துவிட்டால் குமட்டி கொண்டு வந்து விடுகிறது.


நான் ஒருத்தி வருவது பெரிய காரியம் இல்லாமல் போனாலும் எழுந்தாவது நிற்கலாமே அவரவர் வேலைகளில் முக்கியமாகத்தான் இருக்கிறார்கள். 


தப்பித்தால் போதுமென மூக்கை அறுத்து பிடித்து ஓடினேன். பாதை இறக்கம் வந்ததும் தான் உயிர் வந்தது போல இருந்தது.


பார்வையில் படரும் தூரத்தில் வீடு தெரிந்தது.  வாசலை சானம் தெளித்து காலை வேலைகளை முடித்திருந்த அம்மா என்னை கண்டதும் ஓடிவந்தாள். 


"வாமா மதியம் போல வருவேனு நெனைச்சேன் காலையிலே வந்துட்ட போனு பண்ணிருந்தா சின்னவன அனுப்பிருப்பேனே ... சரி ஊருல எல்லாம் எப்புடி இருக்காங்க .. உம் மாமியாகாரி நல்லா பேசுதா... வூட்டுகாரு வருலையா ... என்ன சொன்னாரு ... பதிலுக்கு காத்திருக்காமல் வழக்கமான கேள்விகளை சரமாக கேட்டு முடித்தாள்.


எல்லாவற்றுக்கும் பதில் சொன்ன பிறகு ஒரு கடுங்காப்பி கிடைத்தது.


குடித்து முடித்த நேரத்தில் வயிறு பிரட்டிக்கொண்டு கலக்கியது. 


நான்கு அறைக்குள்ளே வாழ்வை கடத்திய பின் திறந்த வெளி மிக கொடுரமாக தோன்றியது. 


ஏரியை நோக்கி ஓடினேன். பையை தூக்கி கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தாள் ஒருத்தி. அவளுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. மூக்கை பிடித்து  ஓடிய அவளை  பொருட்படுத்தாமல்  அமர்ந்தேன்.



🌺நிழலி

கிழுமத்தூர் 



நன்றி



Post a Comment

0 Comments