**** *பயணம்*

*பயணம்*




கனவுகளைக் கைக் கொண்டு

எண்ணங்களில் நடைபிடித்து - இனிதே தொடங்கியது ருத்ராவின் பயணம். ஒரு தாயின் பிரசவ வலியுடன் பிறக்கவில்லை, மாறாக இவள், ஒரு பெண்ணின் மன வலிமையிலிருந்து பிறந்தவள். ஆம், சமூகத்தில் பெண்ணிற்கு கொடுக்கப்படும் பல நிலைகளைக் கண்டு, கதறி, கண்ணீர் மல்கி, ஒரு ஆணின் அதாவது ஆண் என்ற போர்வையில் பெண்களை வெறும் வேசிகளாகப் பார்க்கும் காமக் கொடுரனின் பிடியிலிருந்து சிக்கி சமுதாயத்தில் தனக்கு கிடைத்த அவமரியாதை மிக்க பட்டங்களை காலில் போட்டு மிதித்து விட்டு தன் தாயின் தைரியத்தில், எல்லாம் வல்ல இறைவன் ஈசனின் அனுக்கிரகத்தில் பிறந்தாள், ருத்ரா.


நெருப்பைக் கக்கும் சிவந்த விழிகள்

நேர்மையான எண்ணம்

கோவத்தில் கொந்தளிக்கும் மனம்

சிந்தனையில் உறுதி

செயலில் வெற்றி

தன் வெற்றியின் மூலம்

பழிவாங்க துடிக்கும் இதயம்

பலருக்கும் உதவி செய்ய மட்டுமே வேலை செய்யும் மூளை

        இதுதான் ருத்ராவின் குணாதிசியங்கள்.


ருத்ரா (Rudraah), இவள் பெயரை உச்சரிக்கும் போதே ஒரு வித சிலிர்ப்பு, இவளிடம் பேசும் போது ஏற்படும் பயம் கலந்த மரியாதை, இருந்தால் இவளைப் போன்றே பெண் பிள்ளை இருக்க வேண்டும் என்ற எண்ண அலைகளை நம்முள் ஓடச் செய்யும் அளவுக்கு இருக்கும் இவளுடனான வாழ்க்கைப் பயணம்.  கல் நெஞ்சையும் கரைய வைக்கும், இளகிய நெஞ்சதையும் இறுக வைக்கும் இவளது பேச்சு.

      சமுதாயத்திலும், சமூக ஊடகங்களிலும், வலை தளங்களிலும் பெண்களுக்கு இருக்கும் நிலை பல விதங்களில் பெண்களைப் பாதித்து மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகிறது.   இதில், சில பெண்கள் நிம்மதி, சந்தோஷம், மானம், மரியாதை இவற்றுக்கும் மேலாக வாழ்க்கை என எல்லாவற்றையும் இழக்கின்றன. தன் வாழ்க்கைப் பயணத்தில் நடக்கும் இன்னல்களையே சமாளிக்கும் நேரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு பெண்களின் இந்த நிலைபற்றி யோசிக்க கூட நேரம் இல்லை. 


பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று தன் வாழ்க்கைப் பயணத்தை முடிக்காமல், சில நினைவுகளும் தன் பயணத்தில் வேண்டுமென்பதற்காக மக்களுக்கும், பெண்களுக்கும், மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் வளம் பெற ஊக்கமளித்து, பயிற்சியளித்து, ஒரு படிக்கல்லாக தன்னைத் தானே மற்றவர்களின் வாழ்வில் அர்பணித்து, மக்களின் மகிழ்ச்சி கலந்த நன்றியுணர்வில் வாழ்கிறாள், மேலும், பெண் என்பவள் மெல்லினமாக இருக்கும் வல்லினம். பெண் இனத்தை ஏளனமாக நினைக்கும் ஆண்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம், பெண்களின் நடவடிக்கையில் சில மாற்றங்களை கொண்டு வர பெண்கள் செய்ய வேண்டிய காரியங்களை சொல்லிக் கொடுத்தும், பெண்கள் இக்கால நடைமுறைக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டு, தன் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளும் முறை பற்றியும் பயிற்சி அளித்து, சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒரு மாதிரியாக வாழ்கிறாள், இவள்.

         இவளது பயணம் இவள் வாழ்வில் மட்டுமல்ல, இவளைச் சுற்றியுள்ள அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நினைவுச் சின்னமாய் அமைகிறது. 

         காற்றைப் போல, நீரைப்போல, சொல்லப் போனால் பஞ்ச பூதத்தைப் போல, இயற்கை அன்னையைப் போல அனைவரையும் நேசித்து, அவர்களை அரவணைத்து, ஆறுதல் அளித்து, தன் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் ரசித்து ருசித்து சந்தோஷமாக பயணிக்கிறாள், ருத்ரா.


  பயணங்கள் தொடரும்......



நன்றி.... வணக்கம்......


           - Rudraah

Post a Comment

0 Comments