வைகை கரையோரத்தில்
சுவர்கள் எங்கும் வண்ணமாய் விளம்பரங்கள்,இருள் சூழ்ந்த வைகை கரையோரத்தில் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து கொள்ள ரிக்ஷா வண்டியில் வலம் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள்,பொழுது போக்கிற்காக மதுரை வீதிகளில் சுற்றித்திரியும் படித்த வேலையில்லா பட்டதாரிகள்,நாளைய வருமானத்திற்காக வியர்க்க விறுவிறுக்க வெயிலில் கருத்த முகத்துடன் வீடு திரும்பும் தொழிலாளர்கள்,பாவங்களை பலசெய்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சியைத் தரிசித்து விட்டு தன்னையும் தூய்மை செய்து கொள்ளும் மனிதர்கள்,பெரியார் பேருந்து நிலையத்தில் சைகைகளைக் காட்டி வாடிக்கையாளர்க்காக காத்திருக்கும் கற்புடைய விபச்சாரிகள்,இரவோடு இரவாக பேருந்திற்கு பின்னால் நின்று யாருக்கோ,எவருக்கோ எதிர்பார்புடன் நோக்கும் திருநங்கைகள்,மதுரை தமுக்கம்,கோரிப்பாளையம் சுற்றி அடிக்கடி மேடையிட்டு அரசியல் பேசும் நாகரிகமான அரசியல் தலைவர்கள்,முத்தமிழ் வளர்த்த மதுரை என்பதை மறந்துவிடாமல் தமிழுக்கு,தமிழ் மொழிக்கு சிறப்பினை செய்யும் முற்போக்கு எழுத்தாளர்களின் இலக்கிய கூட்டங்கள்,நடுஇரவில் வண்டியூர் கம்மாய்,கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் கும்பலாய் அமர்ந்து புகையிடும் அற்புத மனிதர்கள்.
சாலையோரத்தில் அமர்ந்து தன் எதிர்கால கனவை மெய்பித்துக் கொண்டிருக்கும் மனப் பைத்தியங்கள்,கல்லூரிக்கு வருவது போல் வந்து தன் காதலிக்காக இராஜாஜி பூங்கா,பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரமாக ஜியோ மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்களும்,மாணவிகளும்,திருமலை நாயக்கர் மஹாலை காணவந்து வரலாற்றுத் தூண்களுக்கு பின்னால் களவு வாழ்க்கையை மேற்கொள்ளும் காதலர்கள் தெருவிளக்கின் வெளிச்சத்தில் வைகைக் கரையோரத்தில் குப்பையோடு சேர்ந்து சுழல் சுழலாகக் காட்சியளிக்கும் நீர்த்திவலைகள்,காலம் கடந்தும் இன்னும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் இவை எல்லாம் இன்னும் தொடர்கிறது.
பொன்னகரம்,இப்பகுதியினை சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் கழிவுப் பொருள்கள் வைகையில் தான் கலக்கிறது.இயந்திரமான உலகத்தில் இயந்திரமாக ஆக்கப்பட்டவர்கள் மனிதர்கள்.அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளும் இங்கேதான் வசிக்கிறார்கள்.
தன்கனவு வாழ்வை தொலைந்து விட்டு கனவு உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் பொன்னகரத்து மக்கள்,பேருந்து வந்தபாடில்லை மணி சரியாக 7.45 நீல நிற சட்டை,அதற்கு எடுத்தாற்
போல கருப்பு நிற பேண்ட்,அடுத்த நண்பர்களிடத்திருந்து இரவில் வாங்கிப் போட்டு இருக்கும் வெள்ளை நிற ஷூ,கையில் இரண்டு இலக்கிய நூல்கள் ஒன்று மெளனி கதைகள்,மற்றொரு ஜெயகாந்தன் சிறுகதைகள்,நெற்றியில் குங்குமபொட்டு,அவ்வப்போது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் வட்ட வடிவமான சீப்பை எடுத்து தலையை வாரிக் கொள்ளுகிறான் மருதன் பெருந்து வந்தபாடில்லை.கிரோஸ் ரோட்டில் அமைந்திருக்கும் திருமலை நாயக்கர் சிலையின் எதிர்புறமாக மருதராணியின் வீடு.
ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் பேருந்துகளை நின்று பார்த்துக் கொண்டேதான் வெகு நேரமாக நின்று கொண்டு தான் இருக்கிறான்.குட்டையான உயரம்,அலைகடல் போல சுருள் சுருளான கருகூந்தல்,அந்த கருகூந்தலில் காலையில் மலர்ந்த மல்லிகை மொட்டுக்கள் சூடி இருந்தாள்.கயல் மீன்கள் போன்ற கண்கள் அந்த கண்ணுக்கு மையிட்டு இருந்தாள்.நெற்றியில் குங்குமபொட்டு பளீரென மின்னுகிறது.பாண்டிய நாட்டு மாணிக்க முத்துக்களை போலச் சிறியதாக மூக்குத்தி,ஊதா நிறத்தில் சுடிதார்,கையில் அம்பை சிறுகதைகள்.மீனாட்சி அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ் பி.ஏ.படிக்கிறாள் மருதராணி.
கோரிப்பாளையம் தேவர் சிலையைச் சுற்றி அமைந்திருக்கும் வானளவில் உயர்ந்து இருக்கும் கட்டடங்கள்.இந்தக் கட்டடங்களுக்குள்ளேதான் அரசு மருத்துவமனையில் மகளை மருத்துவமனையில் சேர்த்து விட்டு கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பாப்பாபட்டியிலிருந்து வந்து இருக்கும் மூடநம்பிக்கை உள்ள மனிதர்கள்.சிக்னல் போட்டு விட்டாச்சு.
அவள் நிழலுக்குப் பின்னால் ரொம்ப நேரமாக நின்று கொண்டே தான் அவனைப் பார்த்து கொண்டு இருக்கிறான் மருதன்.மனம் பக்குபக்குனு அடிக்கின்றது பேச வார்த்தை வரவில்லை.கல்லூரி விளையாட்டு போட்டிகளில் கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று இருக்கிறாள் மருதராணி.தன் சொந்த பூர்வீகமான ஊரு உசிலம்பட்டியிலிருந்து கல்லூரி படிக்க வந்து இருக்கிறாள்.எத்தனை நாளுக்கு மனம் இப்படி மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் அது மனம் அல்லவா?
அவளை பின் தொடர்ந்து பேருந்தில் ஏறிவிட்டான்.பேருந்தில் கூட்டம் அதிகம்.இரண்டு சீட் தள்ளி அமர்ந்து இருந்தாள்.அவளுக்கு பின்னால் நின்று கொண்டே இருந்தான் மருதன்.அவளிடம் பேசுவதற்கு பயிற்சி செய்து வந்த கவிதைகள் எல்லாம் மறந்து விட்டது.தனது பாக்கெட்டில் இருந்த கடிதத்தை எடுத்து அவள் மடியின் மீது வைத்துவிட்டு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிட்டான்.
மறுநாள்................
செல்லிடை பேசி ஒலிக்க மருதன் டவுன்ஹால் சாலையில் உள்ள தலை விரிச்சான் சந்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
ஹாலோ...................
ஹலோ யாரு........
மருதராணி பேசுறேன்.
சொல்லுங்க
ஏன்.......நேரடியாக வந்து சொல்லியிருக்கலாம் இல்ல.....
இல்ல என்னை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தீங்க.
அட.....என் பார்வையே அப்படிதான்.
சொல்லியிருப்பேன் பயம்.
எதுக்கு பயம்.
என்ன படிக்கிற
பி.ஏ.தமிழ்.........ம்.
உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு ஆசைப்படுகிறேன்.
என்வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க.நான் அவ்வளவு தான் வீட்டில் எல்லாம் கொலைகாரங்க கொன்னேபுடுவாங்க.
மருதனுக்கு மனசு சுக்குநூறாய் உடைந்து விட்டது.மதியம் சாப்பாடு இல்லாமல் ஒரு வடையும் டீ யும் குடித்து விட்டு அவளுக்காகவே நின்றவன் அல்லவா?அவளையே உயிராக எண்ணி வாழ்ந்தவன் அல்லவா?
மருதராணி .........நீ சம்மதிச்சா போதும்
ப்ளீஸ்.......புரிஞ்சுக்கோங்க
மறுநாள் அன்று கோரிப்பாளையத்தில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தான்.சாலையில் வாகனங்கள் சத்தத்தை பிளிரிட்டு எழுப்புகின்றன.மருதராணிதான் போன் செய்தாள்.அவளுக்கு பொறந்த நாள் என்று.பிறந்த நாளுக்குப் பரிசு பொருள் வாங்குவதற்காக கோரிப்பாளையத்தில் உள்ள கடைக்குச் சென்று அழகாக இரு தோடுகளை வாங்கினான்.நேராக அவள் சொன்ன இடத்திற்கு சென்றான்.வையை கரையோரத்தில் அமைந்திருக்கும் பாலத்தின் அடியில் பிறந்த நாள் ஆடையை உடுத்தி திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.கையில் நிறைய இனிப்பு மிட்டாய்கள் ஒன்றை எடுத்து புன்முறுவலோடு மருதனுக்கு கொடுத்தாள்.அந்த முட்டை கருவிழிகள் கயல் மீன்விழிகளைப் போல மின்னின.
பிடித்து இருக்கா.
சிரித்தாள்.
அந்த இரு தோடுகளை அவளிடம் கொடுக்க ஆவலோடு வாங்கி காதின் ஓரத்தில் கொண்டு சென்று அழகு பார்த்தாள்.அவளுடைய காதின் ஓரத்தில் அந்த இரு தோடுகளும் அசைந்து கொண்டிருந்தன.மெளனமாக அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.
மருதா.......மருதா.....
ம் சொல்லுங்க
நல்லா இருக்கா
தலையாட்டிக் கொண்டு மெளனமாய் சிரித்தாள்.நல்லா இருக்கு.என் மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்”
மருதராணி
போகட்டுமா .........ம்.
நல்லாபடிங்க.என்னை விட நல்லபொண்ணு கிடைப்பா.
ம்.........சரியா
இல்ல ராணி....வார்த்தை மருதனுக்கு வரவில்லை.
மருதா....நான் உன் கூடத்தான் வாழப்போறேன் நீ சம்மதிச்சா போதும் நான் சொல்லுறதை புரிச்சுக்கோங்க....
காட்டு பையல்கள் அடித்துக் கொன்னேப்புடுவாங்க.
மருதா.உன்னைப் புடிக்கும்.
இப்பகூட உன்னைப் பிடிக்கும்.
போகட்டுமா......அவனைப் பார்த்தவாறே பாலத்தின் அடியில் இருந்து கல்லூரியை நோக்கி சென்றாள்.
மதுரை சென்று வரும் பொழுதெல்லாம் மதுரையைச் சுற்றியுள்ள பாலத்தையும்,வையை கரையோரத்தில் அமைந்து இருக்கும் வானளாவிய கட்டடங்கள்,தேனி ஆனந்தம் சில்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் மூன்று ஆண்டுகளில் மாறிவிட்டது.பாலம் வரும்பொழுது எல்லாம் ஒரு நாளாவது அவளுக்காக வையை கரையோரத்தில் இருக்கும் பாலத்தின் அடியில் நிற்க வேண்டுமென்று ஆசைதான்.அவள் வருவாளா என்று தெரியாது.ஆனால் வெட்கமும்,நாணயமும்,சிரிப்பும் அவளது நினைவாக வையை கரையோரத்தில் இன்னும் இழையோடு கொண்டுதான் இருக்கின்றது.எல்லாம் மாறிவிட்டது.
02.04.2019
மா.மணிகண்டன்
தமிழ் ஆசிரியர்
திரு.வி.க.தெரு,
கோம்பை-625522
உத்தமபாளையம் வட்டம்
தேனி மாவட்டம்

0 Comments