**** ஒன்றில்லையேல் இன்னொன்று

ஒன்றில்லையேல் இன்னொன்று

தன்னம்பிக்கை கதைகள்

 


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 






சன்னலோரத்தில் தன் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்த விசாலாட்சி ஏதோ முணங்கியவாரே அமர்ந்திருந்தாள். கையில் ஒரு பேனாவும் சுருட்டியதாளும் வைத்திருந்தாள். அவள் மடியில் புத்தகப்பையும் மதிய உணவு பையும் இருந்தது.சில நேரம் சன்னலை பார்த்து ஏதோ முணங்கியவாரே வந்தாள்; சில நேரம் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தத் தன் தோழி கமலியிடம் ஏதோ முணங்கியவாரே வந்தாள்.

பேருந்து நாலு முக்கு சாலையைக் கடந்ததைக் கவனித்த விசாலாட்சி பேனாவையும் தன் கையில் வைத்திருந்த தாளையும் புத்தகப்பையினுள் போட்டாள். பள்ளியில் வந்து பேருந்து நின்றவுடன் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள். அப்பொழுதும் ஏதோ முணங்கியவாரே விசாலாட்சி இறங்கினாள். 

கையில் குச்சியுடன் நின்ற பிரியா டீச்சர் அவளைப் பார்த்து……

என்ன விசாலாட்சி? ஏதோ முணங்கியவாரே போகிறாய்?

இல்லை…டீச்சர்…அது வந்து…என்றாள்

அதற்குள் டீச்சர்…..ஒஓ…நேற்று நான் வகுப்பில் உன்னை ஒரு பாடம் எடுக்க சொன்னேனே அதை முணங்குகிறாயா? சரி போ என்றார்.

சரி டீச்சர் என்று விசாலாட்சி விலகினாள்….

வாயில் முணக்கத்தோடு வகுப்பரை சென்றாள். வகுப்பரை சென்றவளுக்கு முணக்கம் நின்று பதட்டம் அதிகரித்தது……

டிங்….டிங்….டிங்ங்…..

பள்ளியில் வகுப்பு ஆரம்பிக்கும் மணி கேட்டது…

பிரியா டீச்சர் வகுப்பிற்குள் ….மாணவர்கள் எழுந்து நின்று….

குட்ட்…..மாாா….ர்ர்ர்…னினினி…ங்ங்ங்…டீச்சர் என்றனர்.

குட் மார்னிங் சிட் டவுன்…என்றார்     பிரியா டீச்சர்…

எல்லோரும் அமர்ந்தனர்…டீச்சர், விசாலாட்சியைப் பார்த்து விசாலாட்சி தயாரா?...என்று கேட்டார்….

‘ஆம்' தயார் டீச்சர் என்றாள் விசாலாட்சி ….

சரி வா வந்து பாடம் எடுக்க ஆரம்பி ….என்றார் டீச்சர்…

விசாலாட்சி பதட்டத்துடன் அவளது பையில் இருந்த புத்தகத்தை எடுத்து கொண்டு அனைவரின் முன் வந்து நின்றாள்….

அவளுக்கு பயம் அதிகரித்தது ….கால்கள் நடுங்கியது…வியர்த்து கொட்டியது…நெஞ்சம் படபடத்தது…பயத்துடன் புத்தகதத்தைப் பார்த்து பாடம் எடுக்க ஆரம்பித்தாள்….

“அணு என்பது ஒரு சிறிய துகள் ….அதனை பிரிக்க முடியாது….”

அவள் பாதி நடத்தி முடிக்கும் போது அவளுக்கு எதிரே இருந்த ராம் …..

பக்கம் எண் என்ன? விசாலாட்சி, என்று கேட்டவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்….

பக்கம் எண் கூறிவிட்டு மீதி பாடத்தையும் நடத்தி முடித்தாள்….

“நன்று விசாலாட்சி” ….என்றார் ஆசிரியர்…அனைவரும் கைத்தட்டினர்…விசாலாட்சி மகிழ்ச்சியோடு தன் இடத்தில் அமர்ந்தாள்.

வாயில் முணக்கம் ஆரம்பித்தது……

திடீரென ஒரு டீச்சர் வந்து வகுப்பில் நுழைந்தார் .அவரது பெயர் மகேஷ்வரி. மகேஷ்வரி டீச்சர், விசாலாட்சியை தலைமையாசிரியர் அழைக்கிறார்….என்று பிரியா டீச்சரிடம் கூறினார்….உடனே பிரியா டீச்சர் விசாலாட்சி உன்னை தலைமையாசிரியர் அழைக்கிறார். சென்று வா என்றார்.

மறுபடியும் வாயில் ஏதோ முணங்கியவாரே தலைமையாசிரியர் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.அவளுக்கு முன் அவளது பள்ளியில் பயிலும் மூத்த சகோதரிகள் அங்கு இருந்தனர்….

தலைமையாசிரியர் அனைவரையும் பார்த்து….நீங்கள் அனைவரும் நாளை இடை கல்லூரி போட்டி செல்லவிருப்பதால் இன்று என் முன் அனைவரும் பேசிக்காட்ட வேண்டும் என்றார்.

அனைவரும் பேசி முடித்த பின் விசாலாட்சி பேச தொடங்கினாள்…..

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் வெண்பா”….

இப்பொழுது அவள் காலில் நடுக்கமில்லை...வியர்க்கவில்லை…நெடுநேரம் முணங்கியதன் பலனாக மிக அழகாக..தெளிவாக..தைரியமாக பேசினாள்….

தலைமையாசிரியரருக்கு விசாலாட்சியை பிடித்து விட்டது. இவர்கள் அனைவரையும் விட ‘இந்த குட்டி பிள்ளைதான் அழகா பேசினா….நாளைக்கு இவ கண்டிப்பா பரிசு பெறுவாள்'…என்றார்

அனைவருக்கும் தலைமையாசிரியர் வாழ்த்து கூறிய பின் விடைபெற்றனர்….

மறுநாள் காலை போட்டி நடக்கும் இடத்திற்கு அனைவரும் வந்தடைந்தனர். அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட வகுப்பறைக்குள் சென்றனர்.

விசாலாட்சியுடன் மகேஷ்வரி டீச்சர் வந்தார்.ஆசிரியர்களுக்கு போட்டி நடக்கும் வகுப்பறைக்குள் அனுமதி கிடையாது என்பதால் அவ்வகுப்பறையின் சன்னலின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசிரியர் பக்கத்தில் மகேஷ்வரி டீச்சர் சென்று நின்றார்.

நிறைய மாணவ மாணவிகள் பேசினார்கள். விசாலாட்சி என்று கூப்பிட்டவுடன் நேற்று தலைமையாசிரியர் ‘நீ கண்டிப்பாக பரிசு பெறுவாய்' என்று கூறியதை நினைத்து கொண்டு அவள் சென்று தைரியமாக பேசினாள். இவளுக்கு பரிசு கிடைத்து விடும் என அனைவரும் நம்பினர்...

எல்லா போட்டிகளும் முடிந்து பரிசு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது…

ஜூனியர் பேச்சுப் போட்டி வெற்றியாளர்கள்…. என்றவுடன் விசாலாட்சி அதிக சந்தோசத்துடனும் எதிர்பார்த்தாள். அவள் எண்ணியது போல் இல்லாமல் அதற்கு மாறாக அன்று அவளுக்கு பரிசு கிடைக்கவில்லை….

கண்ணீருடன் விசாலாட்சியும் அவளுடன் வந்த அனைவரும் அவ்வரங்கத்திலிருந்து வெளியேறினர்…

மறுநாள் கவலையுடன் பள்ளிக்குச் சென்றாள் விசாலாட்சி .வகுப்பு நடந்து கொண்டிருந்தது திடீரென ஒருவர் வந்து விசாலாட்சியை தலைமையாசிரியர் அழைக்கிறார் என்றார்.

விசாலாட்சி வருத்தத்தோடும் பயத்தோடும் தலைமையாசிரியரைச் சந்திக்க சென்றபோது அவர் தொலைபேசியில் பேசி கொண்டிருந்ததை கவனித்து பயத்துடன் சிறிது நேரம் விசாலாட்சி நின்றாள்....

நேற்று எவ்வாறு பேசினாய் ? என்று தலைமையாசிரியர் கேட்டார்

கண்ணில் கண்ணீர் மல்க நன்றாக தான் பேசினேன் ஆனால் பரிசு கிடைக்கவில்லை….என்றாள் விசாலாட்சி.

பரிசு கிடைக்கவில்லை என நீ வருத்தப்படாதே. நீ நன்றாய் பேசியதற்கு பலன் கிடைத்துவிட்டது.நேற்று யாரோ ஒரு ஆசிரியர் நம் மகேஷ்வரி டீச்சருடன் நின்று உன் பேச்சைக் கேட்டுள்ளார். அவர் தான் இப்பொழுது என்னுடன் தொலைபேசியில் பேசினார். “நீ நன்றாக பேசியதாகவும் அதனால் உனக்கு தொலைக்காட்சியில் பேச வாய்ப்பு கொடுக்கப்போறதாகவும் சொன்னார்”…

நீ இந்த கவலையெல்லாம் விட்டுவிட்டு தொலைக்காட்சியில் பேச தயாராகுப் போ....என்றார் தலைமையாசிரியர்.

விசாலாட்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியுடன் தலைமையாசிரியரிடம் இருந்து விடை பெற்று கொண்டு தொலைக்காட்சியில் பேச தயாரானாள்!!!...


நன்றி


- மோ.செந்தில் தேவி,

ஆய்க்குடி.

Post a Comment

1 Comments